இஸ்ரேலில் தொழில் புரியும் இலங்கையர்கள் மீது தொடர்ந்து இரசாயனம் கலந்த நீர் வீச்சுத் தாக்குதல் – கவனமாக இருக்குமாறு தூதரகம் வேண்டுகோள்

வெளிநாட்டு ஊழியர்களை இலக்கு வைத்து இரசாயனம் கலந்த நீர் வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தொடர் சம்பவங்களில், மூன்று இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்பதை இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
டெல் அவிவில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வெளியாகும் காணொளிகள் மற்றும் அறிக்கைகள் குறித்து தூதரகத்திற்குத் தகவல் கிடைத்தது என்றும், அதில் தனிமையான பகுதிகளில் உள்ள வெளிநாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் சிறிய குழுக்களால் இரசாயனம் கலந்த நீரால் தெளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதரகத்தின் கூற்றுப்படி, இந்தச் சம்பவங்கள் தனியாகப் பயணிக்கும் நபர்களை இலக்காகக் கொண்டுள்ளன.
இவ்வாறு தாக்கப்பட்ட மூன்று இலங்கையர்கள் தங்கள் அனுபவங்களைத் தூதரகத்திடம் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கைகளைத் தொடர்ந்து, இலங்கைத் தூதரகம் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சுக்கும் (Israeli Ministry of Foreign Affairs) மற்றும் சனத்தொகை மற்றும் குடியேற்ற அதிகாரசபைக்கும் (PIBA) உத்தியோகபூர்வமாகத் தெரியப்படுத்தியுள்ளதுடன், இலங்கையர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளது.
இதையடுத்து, முதல் தாக்குதல் தொடர்பில் 13 முதல் 19 வயதுக்குட்பட்ட ஐந்து பதின்ம வயதினரை இஸ்ரேலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் இது போன்ற சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண சி.சி.டி.வி காட்சிகளையும் மற்ற ஆதாரங்களையும் பயன்படுத்தி விசாரணைகள் தொடர்கின்றன.
இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் அவதானமாக இருக்குமாறும், குறிப்பாகப் பணம் அனுப்பும் போது குழுக்களாகப் பயணிக்குமாறும், மற்றும் பயணிக்கும் போது பெறுமதியான பொருட்களையும் கையடக்கத் தொலைபேசிகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவசர காலங்களில் உதவுவதற்காக, அவர்கள் உள்ளூர் அவசர தொலைபேசி இலக்கங்களான – பொலிஸுக்கு 100 மற்றும் அம்புலன்ஸ் சேவைக்கு 101 ஐப் பயன்படுத்துமாறும், மேலும் தூதரகத்தின் 24 மணி நேர அவசர தொலைபேசி இலக்கமான (+94718447305) ஐத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய பாதுகாப்பு முகவர் நிலையங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், மேலும் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.



