பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பேஸ்புக் Page களை உருவாக்கி விற்பனை செய்துவந்த நபர் கைது #இலங்கை

அனுமதியின்றி பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கங்களை விற்று பணம் சம்பாதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் பிரிவு (Cyber Crimes Division) மூலம் சந்தேகநபர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர், பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஃபேஸ்புக் பக்கங்களை உருவாக்கி, அவற்றின் ரீச் (reach) மற்றும் பார்வைகளை (views) அதிகரித்துள்ளார். ஒவ்வொரு பக்கமும் 10,000 முதல் 20,000 வரை ஃபாலோயர்களைக் கொண்டிருந்த பிறகு அவற்றை விற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் ஃபேஸ்புக் பக்கங்களை ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை விற்று, வாங்குபவர்களின் மின்னஞ்சல் முகவரிகளைச் சேர்ப்பதன் மூலம் பக்கங்களின் உரிமையை மாற்றியுள்ளார் என்று விசாரணைகள் கண்டறிந்துள்ளன.
பத்துக்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் பக்கங்கள் மூலம் அவர் இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.
தன்னுடைய படங்கள் பயன்படுத்தப்பட்டு ஒரு ஃபேஸ்புக் பக்கம் உருவாக்கப்பட்டதாக ஒரு பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.



