நுகேகொட பேரணி இடம்பெறும் வளாகத்திற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை பொலிஸார் அகற்றினர்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துஎதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள “மகா ஜன ஹன்ட” பேரணி இன்று பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடவில் உள்ள “ஆனந்த சமரகோன்” திறந்தவெளி அரங்கில் இன்னும் சில நிமிடங்களில் ஆரம்பமாகவுள்ளது.
எவ்வாறாயினும், சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி, சர்வஜன பலய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி இந்த பேரணியில் பங்கேற்கவில்லை.
பேரணி ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் இன்று காலை அந்த இடத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.
இதேவேளை, பேரணியில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸார் அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளனர்.
பேரணி நடைபெறும் வளாகத்திற்கு அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் இன்று (21) முற்பகல் 8.30 மணி முதல் முற்பகல் 11.40 மணி வரையும், பிற்பகல் 2.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரையும் க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறுவதால் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும் போது பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு செயற்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும் போது வளாகத்திற்குள் மட்டும் பயன்படுத்துமாறு பொலிஸார் ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும், பரீட்சை நடவடிக்கைகளை முடித்து வெளியேறும் மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படாதவாறு செயற்படுமாறும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கூட்டம் இடம்பெறும் வளாகத்திற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.



