தேசிய மக்கள் சக்தியின் (NPP) இளவயது பிரதேச சபை தலைவர் திடீர் மரணம்

கோமரங்கடவல பிரதேச சபை தலைவர் ரங்க தர்மதாச காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் (NPP) உறுப்பினரான இவர் தனது 34 வயதில் காலமானார்.
மாரடைப்பு காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபரம்..
திருகோணமலையில் என்பிபி உறுப்பினரொருவர் சடலமாக மீட்பு
திருகோணமலை, கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர் ரங்க தர்மதாச இன்று( 21) காலை அவரது வயலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நேற்று மாலை (20) தனது வயலுக்கு காவல் காப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற தவிசாளர் , நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால், அவரது குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் இன்று (21) காலை வயலுக்குச் சென்று தேடியபோது, அவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட ரங்க, அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியில் போட்டியிட்டு கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளராக அதிக வாக்குகளைப் பெற்றுத் தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், கோமரங்கடவல பொலிஸார் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்துள்ளனர்.
சடலம் மீட்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட பொலிஸார், மரணத்திற்கான காரணம் குறித்து கண்டறியும் நோக்கில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மரணத்தின் பின்னணி மற்றும் அது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்த முழுமையான தகவல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவரின் திடீர் மரணம், அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.






