ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள 38 வேட்பாளர்களில் 23 பேரை காணவில்லை.. மாயமாகி விட்டார்கள்
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள 38 வேட்பாளர்களில் 15 பேர் மாத்திரமே தேர்தல் பிரசாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர். எனவும் எஞ்சிய 23 பேரில் மூவர் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை எனவும் ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் (IRES) நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள 38 பேரில் மூன்று வேட்பாளர்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில் அவர்களால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பு மேற்கொண்டபோது குறித்த மூன்று பேரில் இருவர் சார்பில் வேறு நபர்களுக்கு அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்குறித்த 23 பேரில் ஐவருக்கு குறைந்தது சமூக ஊடகங்களான பேஸ்புக் கணக்குகூட இல்லை.
சில வேட்பாளர்கள் தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக ஊடகங்களுக்குக் கூட அறிவிக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 38 பேரின் புகைப்படங்களை தமது இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு முயன்றபோது பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 15 பேரைத் தவிர ஏனைய 23 பேரிடம் அவற்றை பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் பேசக்கூட வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்