🐁🐀
வெள்ள அனர்த்தமும் எலிக்காய்ச்சல் பற்றிய அவதானமும்

வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடுவோருக்கு லெப்டொஸ்பிரொஸிஸ் (Leptospirosis) எனப்படும் எலிக்காய்ச்சல் தொற்று ஏற்படாமல் இருக்க முற்காப்பு மருந்தினை எடுத்துக் கொள்ளுமாறும், தற்காப்பு முறைகளை கையாளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
எலிக்காய்ச்சல் பொதுவாக எலியின் சிறுநீர், எலிக்கடி அல்லது எலியின் எச்சங்கள் உள்ள உணவு பானங்களில் இருந்து தொற்றிக் கொள்ளும் பாக்டீரியா வினால் மனிதனுக்கு ஏற்படும் தீவிரமான காய்ச்சல் ஆகும்.
எலியின் சிறுநீர், மற்றும் எச்சங்கள் என்று பொதுவாக அழைத்த போதும் ஏனைய பல விலங்குகளின் சிறுநீர் மற்றும் எச்சங்களிலில் இருந்தும் மேற்படி லெப்டொஸ்பிரோஸிஸ் எனும் பக்டீரியா தொற்று ஏற்படலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
பன்றிப் பண்ணைகள், கால்நடை பண்ணைகள், வளர்ப்பு மிருகங்கள், வெளவால், வனவிலங்குகள் என பல உயிரினங்களில் இருந்தும் இவை தொற்றிக் கொள்ளலாம்.
குறிப்பாக வயல்களில், சதுப்பு நிலங்களில், தோட்டங்களில் மற்றும் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபடுவோருக்கு தற்காப்பு முறைகள் சொல்லித் தரப்படுகின்றன, பாதங்களுக்கு கம்பூட்ஸ் அணிதல், கைகளுக்கு குலோவ்ஸ் அணிதல், சுத்திகரிப்பு பணிகளின் பின் தம்மை தூய்மையாக சுத்தப்படுத்திக் கொள்ளல் போன்ற சில விடயங்களை குறிப்பிடலாம்.
அதேபோன்று பாதங்களில், கால் கைகளில் சிறிய காயங்கள் உள்ளவர்கள் சேற்று நீரில் உரிய தற்காப்பு இன்றி இறங்குவது அதிகரித்த நோய்த்தொற்று அபாயத்தை கொண்டிருக்கிறது.
வெள்ள அனர்த்தத்தின் பின்னர் தேங்கி இருக்கும் சேற்று நீரில் இந்த பாக்டீரியாக்கள் பெருகி இருக்க அதிக வாயாப்புகள் இருப்பதால் புரொப்லெக்ஸிஸ் (prophylaxis) முற்காப்பு மாத்திரைகளை வைத்தியர்களது பரிந்துரையின் படி எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
டொக்ஸிஸைக்லின் (Doxycycline 200mg) எனும் நோய்தடுப்பு முற்காப்பு மாத்திரையை சுத்திகரிப்பு பணியில் ஈடுபடுவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் ஒரு தடவை எடுத்துக் கொண்டால் ஒரு வாரகாலம் அது தாக்குப் பிடிக்கும் என வைத்திய ஆலோசனை தரப்பட்டுள்ளது, என்றாலும் களத்தில் உள்ள சுகாதார பணியாளர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு அவற்றை பாவித்தல் வேண்டும்.
பொதுவாக வீடுகள் கடைகளில், களஞ்சியசாலைகளில் எலிகளின் தொல்லைகள் அதிகம் இருப்பதனால் உணவுப் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியமாகும், சுத்திகரிப்பு பணிகளின் போதும் பின்னரும் உரிய தற்காப்பு முறைகளை நாம் கையாள வேண்டும்.
அனர்த்த நிலை இல்லாத போதும் நாட்டில் பரவலாக எலிக்காய்ச்சல் அவதானம் இருப்பதனையும் இந்த சந்தர்ப்பத்தில் நாம் கவனத்தில் கொள்ளல் சிறந்ததாகும்.
இலங்கையில் வருடாந்தம் சுமார் 10,000 பேரளவில் எலிக்காய்ச்சல் நோய்த் தொற்றிற்கு ஆளாவதாகவும் அதில் சுமார் 200 பேரளவில் மரணித்து விடுவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
நோய் அறிகுறிகள் : சராசரியாக, தொற்று ஏற்பட்ட 5-14 நாட்களுக்குள் அறிகுறிகள் தோன்றும் (அடைகாக்கும் காலம் 2-30 நாட்கள்). அறிகுறியாக இருக்கும்போது இது பொதுவாக வேறுபடுத்தப்படாத காய்ச்சல் நோயாக வெளிப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 5-10% பேருக்கு கடுமையான நோய்களின் வடிவங்கள் உருவாகலாம், இது பெரும்பாலும் மரணத்திற்கு வழிவகுக்கும்.
கடுமையான காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபருக்கும் லெப்டோஸ்பிரோசிஸ் நோயறிதல் சாத்தியமாகும், மேலும் தசை வலி/மென்மை, மஞ்சள் காமாலை, கண்சவ்வு வீக்கம், இருமல், மூச்சுத் திணறல் மற்றும் இரைப்பை குடல் அறிகுறிகள் ஆகியவை இதில் அடங்கும். லெப்டோஸ்பிரோசிஸில் இறப்புக்கான சில முக்கிய காரணங்கள் சிறுநீரக இதயம் அல்லது சுவாச செயலிழப்பு, பரவலான இரத்தக்கசிவு அல்லது மத்திய நரம்பு மண்டலத்தின் ஈடுபாடு ஆகியவை அடங்கும்.
நோய்த் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் தாமாக வீட்டில் பரசிடமோல் மற்றும் ஏனைய வீட்டு சிகிச்சைகளை செய்யாது வைத்திய சிகிச்சைகளை நடத்தல் கட்டாயமாகும்.
எல்லாம் வல்ல இறைவன் எம்மனைவரையும் இத்தகைய நோய்த் தொற்றுக்களில் இருந்தும் பாதுகாப்பானாக, நோய்வயப்பட்டுள்ள சகலருக்கும் விரைவான நிவாரணத்தையும் நல்லாரோக்கியத்தையும் தருவானாக!
*மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 10.12.2025 || SHARE



