News

இளம்பெண் ஒருவரின் புகைப்படங்களை  ஆபாசமான படங்களாக மாற்றி இணையத்தில் வெளியிட்ட மற்றுமொரு இளம்பெண்ணுக்கு 50,000 ரூபா நட்டஈடு மற்றும் 5,000 ரூபா தண்டப்பணம் விதித்த நீதிமன்றம் #இலங்கை

கொழும்பைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் ஆபாசமான படங்களாக மாற்றி இணையத்தில் வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட இளம் பெண் ஒருவருக்கு கொழும்பு தலைமை நீதவான் அஸங்க எஸ். போதரகம நேற்று ரூபா 50,000 நட்டஈடு மற்றும் ரூபா 5,000 தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் மீது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு தனித்தனி குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, பேஸ்புக்கில் இருந்து குறித்த பெண்ணின் படங்களை எடுத்தமை மற்றும் பேஸ்புக்கில் இருந்து எடுத்த புகைப்படங்களை மாற்றி இணையத்தில் வெளியிட்ட குற்றத்திற்காக இந்த உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு (Computer Crimes Investigation Division) சந்தேகநபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

குறித்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தான் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக சந்தேகநபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சந்தேகநபரான குறித்த பெண் கொழும்பிலுள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் முன்னாள் மாணவி என்றும், தற்போது தனிப்பட்ட பரீட்சார்த்தியாக க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button