ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மற்றுமொரு முன்னாள் பிரதி அமைச்சரும் அடுத்தடுத்து காலமானார்கள்.

அனுராதபுர மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக் மகேந்திர அதிகாரி மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் எஸ்.சி. முத்துகுமாரண ஆகியோர் காலமானார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கெக்கிராவை தொகுதி அமைப்பாளராகவும் செயற்பட்ட ஜனக் மகேந்திர அதிகாரி, சுகயீனம் காரணமாகக் காலமானதுடன், உயிரிழக்கும் போது அவருக்கு 60 வயதாகும்.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனுராதபுர மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு பிரதி அமைச்சருமான எஸ்.சி. முத்துகுமாரண, சிறிது காலம் சுகயீனமுற்றிருந்த நிலையில் நேற்று (17) மாலை காலமானார்.
இவர், காலமான ஜனக் மகேந்திர அதிகாரியுடன் சமகாலத்தில் அரசியலில் ஈடுபட்ட ஒரு அரசியல்வாதியாவார்.
முத்துகுமாரண, தலாவ பிரதேச சபை உறுப்பினராகவும், வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பெர்டி பிரேமலால் திசாநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் மாகாண சபையின் சபைத் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.
பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட்டு 2010 ஆம் ஆண்டு கலாவெவ தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குத் தெரிவான இவர், பின்னர் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் பதவியையும் வகித்திருந்தார்.

