News

கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்கள் திறக்கப்பட்டு மகாவலி கங்கையின் நீர்மட்டம் கணிசமாக உயர்வடையக்கூடும் என எச்சரிக்கை – கண்டி, உடதும்பர பகுதிக்கு 200 mm  இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துத் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தல்

நிலவி வரும் கடும் மழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரன்தம்பே ஆகிய நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய ஆரம்பித்துள்ளதாக மகாவலி அதிகாரசபை அறிவித்துள்ளது.

நீர்த்தேக்கங்கள் வான்பாயத் தொடங்கியுள்ளதால், மகாவலி கங்கையின் நீர்மட்டம் கணிசமாக உயர்வடையக்கூடும்.

இதன் காரணமாக மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கலாவெவ வடிநிலத்திற்குச் சொந்தமான கலாவெவ மற்றும் கண்டலம நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான்பாயத் தொடங்கியுள்ளன.

போவததென்ன, இப்பாகட்டுவ, மொரகஹகந்த மற்றும் களு கங்கை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது அதன் உச்ச மட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதுரு ஓயா நீர்த்தேக்கமும் தற்போது அதன் கொள்ளளவை எட்டியுள்ளதால், அதுவும் எந்த நேரத்திலும் வான்பாயக்கூடும் என மகாவலி அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

அனர்த்த அபாயம் நிலவுவதால் ஆற்றுப் பகுதிகளைப் பயன்படுத்துவோர் மற்றும் தாழ்நில மக்கள் அவசர நிலைமைகளுக்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கண்டி, உடுதும்பர பகுதிக்கு 200 மி.மீ. இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படும் இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகவும், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துத் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ளுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அந்நிறுவனத்தின் புவிச் சரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர, மழையுடனான வானிலை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெளியேறுவதற்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

இதற்கமைய கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்புற, மெததும்புற மற்றும் மினிப்பே ஆகிய பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்டண்டாஹின்ன மற்றும் மத்துரட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்தச் சிவப்பு எச்சரிக்கை பொருந்தும். 

கடந்த நாட்களில் பெய்த கனமழை காரணமாகப் பல பகுதிகளில் மண்சரிவுக்கான முன்னெச்சரிக்கை அறிகுறிகள் தென்படுவதால், வீடுகள் மற்றும் கட்டிடங்களில் வெடிப்புகள் காணப்பட்டால் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என வசந்த சேனாதீர மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

அவ்விடங்களில் மீண்டும் மண்சரிவு அல்லது மண் மேடுகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதால், அந்த இடங்களைத் தவிர்த்துத் தமது பாதுகாப்பை உறுதி செய்து உயிரைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மக்களுக்கு மேலும் அறிவித்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button