எதிர்காலத்தில் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது; அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளிப்பு – எதிர்க்கட்சியினர் சமூகத்தின் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த முயற்சிகின்றனர்

எதிர்காலத்தில் நாட்டில் எவ்விதத்திலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (18) நடைபெற்ற விசேட நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்க்கட்சியினர் சமூகத்தின் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எரிவாயு இறக்குமதிக்காக டெண்டர் நடைமுறை ஊடாக புதிய நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய அந்த நிறுவனத்தின் முதலாவது எரிவாயு கப்பல் ஜனவரி மாதம் 5 ஆம் திகதியளவில் நாட்டை வந்தடையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னதாக இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, புதிய நிறுவனத்திற்கு எரிவாயு டெண்டரை வழங்கியதன் காரணமாக மார்ச் மாதமளவில் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத்:
“கடந்த காலங்களில் ஓமான் நிறுவனமே எரிவாயுவை விநியோகித்தது. ஓமான் நிறுவனத்தை விட 15 டொலர் சதங்கள் குறைவாக புதிய நிறுவனம் ஒன்று டெண்டர் கோரியிருந்தது. அதனடிப்படையில், டெண்டர் குழு அந்தப் புதிய நிறுவனத்திற்கு அதனை வழங்கியது. ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதுடன், தரப்பரிசோதனைக்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. முதலாவது கப்பல் ஜனவரி 5 ஆம் திகதி இலங்கைக்கு வரும். எந்த வகையிலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது. வீணாக மக்களை அச்சப்படுத்த வேண்டாம். ஒரு நாடாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து எழுச்சி பெறுவோம். அந்த உறுதிப்பாடு எங்களிடம் உள்ளது.”

