தரமற்ற தடுப்பூசிகளை பயன்படுத்தியதால் இரு யுவதிகள் உயிரிழந்துள்ள நிலையில், தரமற்ற மருந்தை கொண்டு வந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை பணி இடைநீக்கம் செய்துள்ளனர் ; சஜித் குற்றச்சாட்டு

தரமற்ற மருந்துகளைப் பயன்படுத்தியால் உயிரிழந்த இரு யுவதிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட வைத்தியர் ருக்ஷான் பெல்லன பணி இடைநீக்கம் செயப்பட்டுள்ளார். ஆனால் தரமற்ற மருந்துப் பொருட்களை கொண்டு வந்தவர்கள் இன்னும் பணியைத் தொடர்வதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், அரசியலமைப்பில் தெளிவான திருத்தம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படும் சமயத்தில் நமது நாட்டில் அடிப்படை உரிமைகள் தொடர்பிலான அத்தியாயத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மட்டுமல்லாது, இலவச சுகாதாரம், இலவச கல்வி, கலாச்சார உரிமைகள் மற்றும் மத உரிமைகள் உட்பட பரந்த வரையறையில் இந்த அடிப்படை உரிமைகள் அமைய வேண்டும்.
தற்போது, தரமற்ற தடுப்பூசி பயன்படுத்தப்பட்டமையினால் ஹபரகட மற்றும் மத்துகம பிரதேசங்களில் இரு யுவதிகள் உயிரிழந்துள்ளனர்.
தற்சமயம் சட்டவிரோத மருந்துப்பொருள் மாபியா நடந்து வருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சுகாதாரம் அடிப்படை உரிமையாக்கப்படும்போது, வாழ்வதற்கான உரிமையும் பலப்படும்.
இத்தகைய நிலைக்கு மத்தியில் தரமற்ற மருந்துகள் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்பதை முன்வைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேட்டுக் கொண்டார்.
சுகாதாரத் துறையில் நிலவிவரும் ஊழல் மற்றும் மோசடிகளை அம்பலப்படுத்தும் வைத்தியர் ருக்ஷான் பெல்லன ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமையை வைத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது நியாயமற்ற செயலாகும். சுகாதாரத் துறையில் காணப்படும் தரமற்ற மருந்துகள் மற்றும் ஊழல் விடயங்களை பேசுவதற்கு அவருக்கு உரிமை உண்டு.
இவை அடிப்படை உரிமைகள் ஆகும். வாழும் உரிமை மற்றும் சுகாதார உரிமை ஆகியன அடிப்படை உரிமைகள் ஆகும்.
ஆகவே இந்த பணி இடைநீக்க நடவடிக்கை அநீதியான செயலாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

