News

கிரீன்கார்ட் விசா குலுக்கல்  முறையில் 2017 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற நபர், பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர் என தெரிவித்து க்ரீன் கார்ட் திட்டத்தையே  உடனடியாக நிறுத்தி வைக்க உத்தரவிட்ட டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், க்ரீன் கார்ட் திட்டத்தை உடனடியாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.ஐ.டி ஆகியவற்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேக நபர், இந்த விசா குலுக்கல் முறையிலேயே 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குள் நுழைந்தது கண்டறியப்பட்டது.

48 வயதான போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவர், க்ரீன் கார்ட் பெற்று சட்டபூர்வமாக தங்கியிருந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம், ஜனாதிபதி ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.

இத்தகைய கொடூரமான நபர்கள் ஒருபோதும் நமது நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது என அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 பேருக்கு குலுக்கல் முறையில் அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்குவதற்கான க்ரீன் கார்டுகளை வழங்குகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான குலுக்கல் திட்டத்திற்கு சுமார் 2 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர்.

தற்போது இந்த நிறுத்தம் காரணமாக அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப் நீண்டகாலமாகவே இந்த விசா குலுக்கல் முறையை விமர்சித்து வருவதுடன், இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும், தகுதி அடிப்படையிலான விசா முறையே சிறந்தது என்றும் கூறி வருகிறார்.

சந்தேக நபர் கிளாடியோ, நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்ததுடன், எம்.ஐ.டி பேராசிரியர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

இந்தத் தடை தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது குறித்து மேலதிக சட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button