அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கும் என அறிவித்தது

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ‘டிட்வா’ (Ditwah) புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கும் என அறிவித்துள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க இந்தியா 450 மில்லியன் டாலர் உதவி:
அமைச்சர் ஜெய்சங்கர்
‘டிட்வா’ புயலால் இலங்கையில் சேதமடைந்த பகுதிகளை புனரமைக்க இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய அமைச்சர், இதில் 350 மில்லியன் டாலர் சலுகைக் கடனாகவும், 100 மில்லியன் டாலர் மானியமாகவும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இன்று காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் நடத்திய சந்திப்பு குறித்த விபரங்களை வெளியிட்ட அவர், இலங்கையில் ‘டிட்வா’ புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகக் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:
“பிரதமர் நரேந்திர மோடியின் கடிதமானது, முதன்மையான உதவியாளர் (First Responder) என்ற எமது பங்களிப்பை உறுதிப்படுத்துவதுடன், இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர் புனரமைப்புத் திட்டத்தை வழங்க உறுதியளிக்கிறது.
இந்த வாக்குறுதியை எவ்வளவு விரைவாகச் செயல்படுத்த முடியும் என்பதிலேயே எமது பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தின.”
இலங்கையின் நெருங்கிய அண்டை நாடு என்ற ரீதியில், பொருளாதார நெருக்கடியைப் போலவே இவ்வாறான இக்கட்டான காலத்திலும் இந்தியா முன்வந்து உதவுவது இயல்பான ஒன்று என அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் இணைந்து நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.



