கட்டார், தோஹாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த விமானம் ஒன்றில் பயணிகள் போன்று வேடமிட்ட நால்வர் குண்டுகளை வெடிக்கச் செய்ய போவதாக ஈமெயில் மூலம் அச்சுறுத்தல்

கட்டார், தோஹா நகரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த விமானம் ஒன்றில், பயணிகள் போன்று வேடமிட்ட நால்வர் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகக் கிடைத்த மின்னஞ்சல் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேகத்திற்குரிய எவையும் கண்டறியப்படவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தோஹா, கட்டாரில் இருந்து வருகை தந்த விமானம் ஒன்றில், விமானப் பயணிகள் போன்று வேடமிட்ட நால்வர் குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொள்ளத் தயாராக இருப்பதாகக் கிடைத்த மின்னஞ்சல் செய்தியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேகத்திற்குரிய எவையும் கண்டறியப்படவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தோஹாவிலுள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட குறித்த விமானம், இன்று அதிகாலை 1.44 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. அந்த விமானத்திலேயே குண்டுகள் இருப்பதாக மின்னஞ்சல் தகவல் கிடைத்துள்ளது.
விமானம் வானில் பறந்துகொண்டிருந்த போது, விமானத்திற்குள் குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொள்ளத் தயாரான நிலையில் நான்கு பயணிகள் பயணிப்பதாக கட்டுநாயக்க விமான நிலைய மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக, குறித்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த விமானத்தில் 245 பயணிகளும், 10 பணியாளர்களும், இரண்டு விமான ஓட்டிகளும் பயணித்துள்ளனர். விமானம் தரையிறக்கப்பட்டதும், விமானப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் முழுமையான சோதனை முன்னெடுக்கப்பட்டது.
எனினும், அந்த விமானத்தில் குண்டுகளோ அல்லது சந்தேகத்திற்குரிய வேறு எவையுமோ இருக்கவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.



