News

நாங்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்க நடவடிக்கை எடுக்க மாட்டோம்.. ஆனால் அவர்கள் செயல்படும் முறையைப் பார்த்தால், இந்த அரசாங்கம் தானாகவே வீழ்ந்துவிடும் ; நாமல்

அரசாங்கம் தனது அனைத்து தோல்விகளுக்கும் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்த முயற்சிப்பதாகவும், முறையான திட்டமிடல் இன்றி வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனதால் பொதுமக்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 


கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


நிலைமையைச் சரியாக மதிப்பீடு செய்யாமலோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை பெறாமலோ, பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாக அவர் இதன்போது குற்றம் சுமத்தினார்.


“வீட்டை இழந்த ஒருவருக்கு 5 மில்லியன் ரூபா இழப்பீடும், கூரைத் தகடு சேதமடைந்தவருக்கு கூட 10 இலட்சம் ரூபாவும் வழங்கப்படும் என ஜனாதிபதி முதலில் வாக்குறுதி அளித்தார். ஆனால் இப்போது அந்தத் தொகை 5 இலட்சம் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கிறது.”


எந்தவொரு வாக்குறுதியும் சரியான தகவல்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே வழங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறன்றி மக்களின் அழுத்தத்தைத் தற்காலிகமாகத் தணிப்பதற்காக ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார்.


அரசாங்கத்தின் எதிர்காலப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தைக் கவிழ்க்க நடவடிக்கை எடுக்காது எனக் குறிப்பிட்டார்.
“நாங்கள் இந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் செயல்படும் முறையைப் பார்த்தால், இந்த அரசாங்கம் தானாகவே வீழ்ந்துவிடும்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button