அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துபாயில் சேர்த்த பொருட்களில் அஷேன் சேனாரத்ன மோசடி, முறைகேடுகள் செய்துள்ளதாக .ஐ.டி-யில் முறைப்பாடு செய்யப்பட்டது.

‘டிட்வா’ சூறாவளி நிவாரணப் பொருட்களில் முறைகேடு: அஷேன் சேனாரத்ன மீது சி.ஐ.டி-யில் முறைப்பாடு
டுபாயில் வாழும் இலங்கையர்கள், ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனுப்பிய நிவாரணப் பொருட்களில் பாரிய நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ‘எனது நாட்டிற்கு’ (Magen Ratata) அமைப்பின் தலைவர் சஞ்சய மஹவத்த குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய மஹவத்த, இந்த நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்த யூடியூபர் (YouTuber) அஷேன் சேனாரத்ன பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம் சுமத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
“டுபாயிலுள்ள SL Riders குழு, அல் கைமாவில் உள்ள சிலோன் டேஸ்ட் ஹோட்டல் (Ceylon Taste Hotel) மற்றும் பல அமைப்புகள் இணைந்து சுமார் நான்கு கொள்கலன்கள் (Containers) நிறைய நிவாரணப் பொருட்களைச் சேகரித்தன. இருப்பினும், இலங்கை சுங்கப் பிரிவின் யார்டுகளில் (Yards) மேற்கொள்ளப்பட்ட அவதானிப்பின்படி, சுமார் நான்கு லொறி அளவிலான பொருட்கள் மட்டுமே நாட்டுக்கு வந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.”
இந்த ஏற்றுமதி தொடர்பான கப்பல் ஆவணங்களை — அதாவது Bill of Lading (BL) அல்லது House Bill of Lading (HBL) — பகிரங்கப்படுத்துமாறு சேனாரத்னவுக்கு மஹவத்த சவால் விடுத்துள்ளார்.
இந்த ஆவணங்கள் இன்றி, இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொருட்களின் உண்மையான அளவை சரிபார்க்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“அஷேன் வீடியோக்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகிறார்.
கப்பல் ஆவணங்களை (Bill of Lading) சமர்ப்பிக்குமாறு நான் அவருக்கு சவால் விடுகிறேன்.
டுபாயில் உள்ள இளைஞர், யுவதிகள் கோடிக்கணக்கான பெறுமதியான பொருட்களை சேகரித்தனர். அந்தப் பொருட்களுக்கு என்ன நடந்தது?
கொள்கலன்கள் வேறு எங்கோ திறக்கப்பட்டு, ஒரு பகுதி மட்டுமே அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது,” என்று அவர் கூறினார்.
>
நிவாரணப் பொருட்கள் முழுமையான கொள்கலன்களாக (FCL) அனுப்பப்படாமல், குறைந்த அளவு பொதிகளாக (LCL) அனுப்பப்பட்டது குறித்தும் மஹவத்த கவலை வெளியிட்டார். இது வரி ஏய்ப்பு செய்வதற்காகவோ அல்லது மனிதாபிமான உதவி என்ற போர்வையில் பொருட்களை வேறு இடத்திற்கு திசைதிருப்புவதற்காகவோ செய்யப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், டுபாயில் உள்ள இலங்கை இளைஞர்களின் கூட்டு முயற்சியால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அஷேன் சேனாரத்ன சமூக ஊடகங்களில் இது தனது தனிப்பட்ட முயற்சி என்பது போலச் சித்தரிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.



