தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் அரசாங்கத்திற்கு 750 கோடி ரூபா நஷ்டம்: முன்னிலை சோசலிசக் கட்சி குற்றச்சாட்டு

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரமற்றதாக இருந்ததன் காரணமாக, அரசாங்கத்திற்கு 750 கோடி ரூபாவிற்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) குற்றம் சுமத்தியுள்ளது.
முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளபடி,
அடுத்த ஆண்டிற்கான நிலக்கரி விநியோக டெண்டர் ‘ட்ரைடென்ட் சேம்பர்’ (Trident Chamber) எனும் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் கோரப்பட வேண்டிய இந்த டெண்டர் ஜூலை மாதம் வரை தாமதப்படுத்தப்பட்டுள்ளதுடன், அக்காலப்பகுதியில் இந்த நிறுவனம் உட்பட இரண்டு நிறுவனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, இலங்கைக்கு நிலக்கரி விநியோகிப்பதற்காக இருக்க வேண்டிய ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் வர்த்தக அனுபவம் எனும் தகுதி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் தலையீட்டின் பேரில் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் வரை குறைக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாற்றம் கொள்முதல் ஆணைக்குழுவின் எவ்வித அனுமதியும் இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
இந்த டெண்டரைப் பெற்றுக்கொண்ட ‘ட்ரைடென்ட் சேம்பர்’ நிறுவனம், 2014ஆம் ஆண்டு சதோச நிறுவனத்திற்கு அரிசி இறக்குமதி செய்தபோது கொள்முதல் விதிமுறைகளை மீறியுள்ளதாக 2016ஆம் ஆண்டின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சரத் ரெட்டி மற்றும் உள்ளூர் முகவர் சரத் பண்டார ஜயசுந்தர ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் என்றும் அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மாதிரிகளை பரிசோதித்தபோது அவை தரம் குறைந்தவை என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த 750 கோடி ரூபா நஷ்டம் இறுதியில் மின் நுகர்வோரின் கட்டணத்திலேயே சேர்க்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.



