சாரதியின் கதவு திடீரென திறக்கப்பட்டதால் அவர் வெளியில் விழுந்து (கொழும்பு – வெலிமடை) பஸ் பாறையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது – சாரதி பலி 8 பேர் காயம்

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று இன்று (18) அதிகாலை ஹல்துமுல்ல, உவ தென்ன நாயமடித்த பகுதியில் வீதியை விட்டு விலகி பாறையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவரும் சிறுபிள்ளையும் உட்பட மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதி இருக்கைப்பட்டி (Seat belt) அணியாதிருந்த நிலையில், அவருக்கு அருகிலிருந்த கதவு திடீரென திறக்கப்பட்டதால், அவர் பதற்றமடைந்து பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது பேருந்து வீதியை விட்டு விலகி, பாறையில் மோதி குறுக்காகக் கவிழ்ந்துள்ளது.
விபத்தின் போது சாரதி பேருந்தை விட்டு வெளியே தூக்கி வீசப்பட்டு, வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு வாகனத்தின் அடியில் சிக்கியுள்ளார். பிரதேசவாசிகள் அவரை மீட்டு படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
காயமடைந்தவர்களில் ஏழு வயது சிறுவன் உட்பட நான்கு பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.



