News

‘அனுர மீட்டர்’ வெளியிடப்பட்டது – 30 பிரதான தேர்தல் வாக்குறுதிகளில் 10  நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்



“அனுர மீட்டர்” (Anura Meter): 10 வாக்குறுதிகள் நிறைவேற்றம்; 10 பணிகள் முன்னெடுப்பில் – வெரிட்டே ரிசர்ச் (Verité Research) தகவல்


கொள்கை வாக்குறுதிகளைக் கண்காணிக்கும் முயற்சியான “அனுர மீட்டர்” (Anura Meter) இன் அண்மைக்கால இற்றைப்படுத்தலின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் வழங்கப்பட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் கலவையான முன்னேற்றம் காணப்படுவதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.


புதிய மதிப்பீட்டின்படி, 2025 நவம்பர் நிலவரப்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பிரதான தேர்தல் வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

மேலும் 10 வாக்குறுதிகள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன, அதேவேளை 9 வாக்குறுதிகளில் இதுவரை எந்த முன்னேற்றமும் பதிவாகவில்லை.

ஒரு வாக்குறுதி தோல்வியடைந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.


ஜனாதிபதியின் 2024 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து பெறப்பட்ட 30 முக்கிய வாக்குறுதிகளை “அனுர மீட்டர்” கண்காணித்து வருகிறது. 

இந்த மதிப்பீடானது 2026 தேசிய வரவு செலவுத் திட்டம் வரையிலான முன்னேற்றங்களை உள்ளடக்கியுள்ளது. ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியின் தாக்கத்திற்கு முன்னதாக இந்த ஆய்வு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.


பொதுமக்களின் அதிக ஆர்வம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களின் அடிப்படையிலேயே கண்காணிக்கப்பட வேண்டிய வாக்குறுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 

இவை பொருளாதார சீர்திருத்தம், ஆட்சிமுறை, ஊழல் எதிர்ப்பு முயற்சிகள், சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய கொள்கைத் துறைகளை உள்ளடக்கியுள்ளன.


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் முயற்சியாக Manthri.lk தளத்தினால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களைக் கண்காணித்த “மைத்திரி மீட்டர்” மற்றும் “கோட்டா மீட்டர்” ஆகிய முன்னோடித் திட்டங்களைத் தொடர்ந்து இந்த “அனுர மீட்டர்” உருவாக்கப்பட்டுள்ளது.


தற்போது கண்காணிக்கப்படும் 30 வாக்குறுதிகளில், ஏழு வாக்குறுதிகள் பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. 

அத்துடன், கண்காணிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கருதும் மேலதிக வாக்குறுதிகளைப் பரிந்துரைக்குமாறும் அந்தத் தளம் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையின் ஒரே நாடாளுமன்ற கண்காணிப்பு தளமான Manthri.lk, நாட்டின் மிகப்பெரிய சுயாதீன ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான வெரிட்டே ரிசர்ச் (Verité Research) நிறுவனத்தினால் இயக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button