News

கினிகத்தேனை  பகுதி  பாடசாலையொன்றில் 11ஆம் வகுப்பு  மாணவி  ஒருவரை  பல தடவைகள்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு  உட்படுத்திய  குற்றச்சாட்டில் மூன்று சிறுவர்கள் கைது  செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

கினிகத்தேனை  பகுதியில்  அமைந்துள்ள  பிரதான  பாடசாலையொன்றில் 11ஆம் வகுப்பில்  கல்வி பயிலும் பாடசாலை மாணவி  ஒருவரை  பல தடவைகள்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு  உட்படுத்திய  குற்றச்சாட்டில் மூன்று சிறுவர்கள் கைது  செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட  மாணவி,  கினிகத்தேன – கோணவல  பகுதியைச்  சேர்ந்த  ஒருவருடன்  காதல் தொடர்பில்  இருந்ததாகவும்,  அவரை  சந்திக்கச்  சென்ற  சந்தர்ப்பங்களில்  அவர்  தனது  நண்பரின்  வீட்டிற்கு அழைத்துச்  சென்றதாகவும்,  அங்கு  காதலனும்  அவரது  நண்பர்களும்  இணைந்து  தன்னை பாலியல்  துஷ்பிரயோகம்  செய்ததாகவும்  பொலிஸ்  நிலையத்தில்  வாக்குமூலம்  வழங்கியுள்ளார்.

இந்த  மாணவி  தனது  பாட்டியின்  பாதுகாப்பில்  வசித்து  வருவதாகவும் , கடந்த  17ஆம்  திகதி  காலை  வீட்டை விட்டு  வெளியேறி  இரவு  தாமதமாக  வீடு  திரும்பியதைத்  தொடர்ந்து சந்தேகமடைந்த  பாட்டி  கினிகத்தேன  பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்தப்  முறைப்பாட்டின்  அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகளில்,  மாணவி  பல  தடவைகள்  பாலியல்  துஷ்பிரயோகத்திற்கு  உள்ளானது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   இதனைத் தொடர்ந்து,  மேலதிக  வைத்திய  பரிசோதனைக்காக  மாணவி  நாவலப்பிட்டிய  மாவட்ட  பொது வைத்தியசாலையின்  சட்ட வைத்திய  அதிகாரியிடம்  அனுப்பி  வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம்   தொடர்பில்  கைது  செய்யப்பட்ட  மூன்று  சந்தேக நபர்களும்  16 – 17  வயதுக்கிடைப்பட்டவர்கள்  எனவும்,  அவர்கள்  திங்கட்கிழமை (19) அன்று  ஹட்டன்  நீதவான்  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, 2026  பெப்ரவரி  2ஆம்  திகதி  வரை  விளக்கமறியலில் வைக்க ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் நீதவான்   பீட்டர்  போல்  உத்தரவிட்டுள்ளார்

க.கிஷாந்தன்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button