நோன்புகால ஆரோக்கிய உணவு பானங்கள் பற்றிய விழிப்புணர்வு அவசியம் 🥗🍛🍲

துறைசார் வைத்திய நிபுணர்களின் வழிகாட்டலுடன் நோன்புகால ஆரோக்கிய உணவு பானங்கள் பற்றிய விழிப்புணர்வினை மஸ்ஜிதுகள் ஏற்படுத்த வேண்டும்.
ரமழான் மாதம் நோன்பு நோற்றல் ஏனைய எல்லா வணக்க வழிபாடுகள் போலவே அவற்றின் ஆன்மீக இலக்குகளுக்கு ஈடாகவே ஒரு விசுவாசியின் அன்றாட (தனிப்பட்ட மற்றும் கூட்டு) வாழ்விலும் பல சாதகமான தாக்கங்களை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நோன்பு நோற்றல் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பங்களிப்புச் செய்வதாக நவீன அறிவியல் கூறுகிறது, அது சமிபாட்டுத் தொகுதியிற்கு ஓய்வு அளித்து, நச்சுக்களை வெளியேற்றவும் , உடல் எடையைக் குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்ற அதேவேளை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
உடல் ஆரோக்கியத்தை பேணும் நோன்பு உள ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கிறது, அது தரும் ஆன்மீக பண்பாட்டு பயிற்சியும் பக்குவமும் மன அமைதி, பொறுமை, சகிப்புத் தன்மை உட்பட வாழ்வில் நிம்மதி சந்தோஷத்தை தரும் பல்பரிமாண நன்மைகளை கொண்டிருக்கிறது.
உடல் ஆரோக்கியம் சார் பிரதான நன்மைகள்:
சமிபாட்டுத் தொகுதி ஓய்வு: நீண்ட நேரம் உண்ணாமல் பருகாமல் இருப்பதால், சமிபாட்டுத் தொகுதி இதனால் செரிமான செயல்பாடு சீராகிறது.
நச்சுக்களை வெளியேற்றுதல் : உடலிலுள்ள நச்சுத்தன்மைகள் கல்லீரலால் வெளியேற்றப்பட்டு, உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.
உடல் எடை குறைப்பு: கலோரி உட்கொள்ளல் குறைவதால், உடல் கொழுப்பைப் பயன்படுத்தி எடையைக் குறைக்க உதவுகிறது.
இரத்த சர்க்கரை மற்றும் இதய ஆரோக்கியம்: இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
கொலஸ்ட்ரால் அளவைச் சீராக்கி இதய ஆரோக்கியத்தை, நாடி நாளங்களை இரத்தச் சுற்றோட்டத்தை சீர் செய்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி: பழுதடைந்த மற்றும் இறந்த செல்களை சீராக்குவதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது
நோன்பு கால ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்:
சஹர் உணவு: உடலுக்குத் தேவையான ஆற்றலை நாள் முழுவதும் வழங்கக்கூடிய உணவு பானங்களை அளவோடு உட்கொள்ள வேண்டும்.
இஃப்தார் : ஆரோக்கியமான மற்றும் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகள், பழங்கள், நீர்ச்சத்து நிறைந்த பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மஃரிப் அதான் கூறியவுடன் இஃப்தார் செய்து விட்டு தொழுகை முடிந்தவுடனேயே போதிய கால இடைவெளியின்றி இராப்போசனத்தை எடுத்தல், ஏற்பாடு செய்தல் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை:
அதிக காபோஹைதரேட் உணவுகள், எண்ணெய் கலந்து தயாரிக்கப்பட்ட மாமிசங்கள், சிற்றுண்டிகள், இனிப்புகள் மற்றும் அதிக சர்க்கரை பானங்களைத் தவிர்ப்பது நல்லது.
இவை பொதுவாக பேசப்படும் உடல் உள ஆரோக்கியம் சார் விடயங்கள் ஆகும், விஷேட மருத்துவ சிகிச்சைகள் பெறும் நோயாளர்கள், கர்பிணித் தாய்மார்கள் தத்தமக்குரிய வைத்திய ஆலோசனைகளின் படியே நடந்து கொள்ள வேண்டும்.
நோன்பின் அதியுன்னத இலக்குகளில் ஒன்றுதான் ஒரு விசுவாசி தனக்கு விரும்புவதை தனது சகோதரனுக்கும், உற்றார் உறவுகளுக்கும், அண்டை அயலவருக்கும் விரும்புவதாகும், அந்த வகையில் வீண் விரயங்களை தவிர்த்து தமது தேவைகளுக்கு மேலதிகமாக இருக்கும் உணவு பானங்களை தேவையுடையோருடன் பகிர்ந்து கொள்தல், அவர்களையும் நோன்பு நோற்கவும் நோன்பு துறக்கவும் (ஸஹர் இப்தார்) உதவி செய்தல்!
அதிகாலை முதல் அந்திம சாயும் வரை பசி தாகத்துடன் ஏனைய இச்சைகளையும் புலன்களையும் கட்டுக் கோப்பில் வைத்திருக்கும் உபவாசத்தின் பலன்களை இராக்காலங்களில் இரட்டிப்பாக பாழ்படுத்துவது ஆன்மீக ரீதியாக மாத்திரமன்றி ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிப்பதனை நாம் அறிவோம்.
ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள் போன்றே நாம் நித்திரை கொள்ளும் நேரத்தையும் சரியாக முகாமை செய்து கொள்ள வேண்டும், உண்டுகளிப்பதற்காக இரவெல்லாமா விழித்திருந்து விளையாட்டுகளில் பொழுது போக்குகளில் ஈடுபடுவது, ஊர் சுற்றித் திரிவது, விருந்துகள் என்று அழைவது பகலெல்லாம் படுத்து உறங்குவது போன்ற செல்வந்த அரபு நாட்டு வாழ்வொழுங்கும் ஆரோக்கியத்திற்கு கேடாகும்!
அந்த வகையில் துறைசார்ந்த அறிவுடைய வைத்தியர்களது அறிவுரைகளை ரமழான் மாதத்திற்கு முன்னரும் ரமழான் மாத காலத்திலும் மஸ்ஜிதுகள் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பது மார்க்கக் கடமையாகும்.
மேலதிக குறிப்பு: ரமழான் நோன்பு மாதம் என்றாலே முஸ்லிம்கள் இரவைப் பகலாக்கி உண்டு களிக்கும் உத்சவ காலம் எனும் மனப்பதிவை ஏனைய சமூகத்தவர்கள் மத்தியிலும் சந்தைகளிலும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
நோன்பு காலத்தில் விளம்பர பரோபாகார சமாதான சகவாழ்வு இப்தார் விருந்துகளை தவிர்த்து இரு பெரு நாட்களை மாத்திரமே உத்சவ தினங்களாக அவர்களுடன் வரைமுறைகளுடன் பகிர்ந்து கொள்தல் அறிவுடமையாகும்.
உங்களது ஆத்மார்தமான துஆக்களில் யுகத்தின் மிகப்பெரிய சோதனைகளுக்கு (அதியுன்னத ஆன்மீக படிநிலைகளில் இருந்து கொண்டு) முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பலஸ்தீன் காஸா, சூடான் உறவுகளையும்…
எம்மையும் எமது பெற்றார், உடன் பிறப்புக்கள், மனைவி மக்கள், உற்றார் உறவினர், சந்ததிகள், ஆசான்கள், அறப்பணிகள் புரிவோரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!
*மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 26.01.2026 || SHARE



