புதிய வரியால் தேங்காய் எண்ணெய் விலை உயர்வு..

நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.
தேங்காய் சார்ந்த தயாரிப்பு ஏற்றுமதியாளர்கள் நுகர்வோரின் தேங்காய் எண்ணெய் நுகர்வு உரிமையைப் பறிக்கின்றனர்.
பல்வேறு இன மக்கள் வாழும் பல்லின நாடான இலங்கையில், மக்களுக்கு எனத் தனித்துவமான உணவு தயாரிப்பு முறைகள் உள்ளன.அதன்படி, பெரும்பான்மையான நுகர்வோர் தமது உணவைத் தயாரிப்பதற்குத் தேங்காய் எண்ணெயையே பயன்படுத்துகின்றனர். இதனால், தேங்காய் எண்ணெய் இலங்கை நுகர்வோருக்கு இன்றியமையாத ஒரு பொருளாக மாறியுள்ளது.
இவ்வாறான நிலையில், அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையின்படி, எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்படவுள்ளது. இதன் காரணமாக, நாட்டு நுகர்வோர் அதிக விலைக்கு தேங்காய் எண்ணெயை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், அந்த நேரத்தில் சந்தையில் பாம் எண்ணெய் (Palm oil) மற்றும் ஏனைய எண்ணெய் வகைகள் தாராளமாகக் கிடைப்பதைத் தடுக்க முடியாது. அதுமட்டுமன்றி, ஏனைய எண்ணெய் வகைகள் கலக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்களையும் சந்தையில் காணக்கூடியதாக இருக்கும்.
நுகர்வோர் என்ற ரீதியில், நுகர்வோருக்கு நியாயமான விலையில் தூய்மையான தேங்காய் எண்ணெயைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்குமாறு நாம் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாகக் கோரி வருகிறோம். இந்நாட்டு நுகர்வோரின் உணவுப் கலாச்சாரத்தின்படி, இறைச்சி, மீன் மற்றும் ஏனைய உணவுகளை அடிக்கடி அதிக எண்ணெயில் பொரித்தெடுக்கும் (Deep fry) வழக்கம் உள்ளது. ஆனால், உணவுகளை அதிக எண்ணெயில் பொரிப்பதற்குத் தேங்காய் எண்ணெய் மட்டுமே பொருத்தமானது என்றும், பாம் எண்ணெய் மற்றும் ஏனைய எண்ணெய் வகைகளை இதற்குப் பயன்படுத்துவது நோய்களை வரவழைக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே, தூய்மையான தேங்காய் எண்ணெயைக் குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்கான நுகர்வோரின் உரிமையை உறுதிப்படுத்துமாறு நாம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.
அந்த உரிமைக்குத் தடையாக இருப்பது தேங்காய் சார்ந்த தயாரிப்பு ஏற்றுமதியாளர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. நாட்டு நுகர்வோர் நுகர்வுக்குத் தேவையான தேங்காய் எண்ணெயைத் தயாரிக்க வேண்டிய தேங்காய்களை அவர்கள் கொள்வனவு செய்து, டொலர்களை ஈட்டுவதற்காகத் தேங்காய் சார்ந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றனர். இதன் விளைவாக உள்நாட்டுச் சந்தையில் தேங்காய் எண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதன் மூலம் நுகர்வோர் தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக ஏனைய எண்ணெய் வகைகளை நுகரும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
எனவே, இறக்குமதி செய்தோ அல்லது உள்நாட்டுச் சந்தையிலோ மிகக் குறைந்த விலைக்கு வாங்கக்கூடியதாக இருக்க வேண்டியது தேங்காய் எண்ணெயே என்றும், ஏனைய எண்ணெய் வகைகளை நுகருமாறு இந்நாட்டு நுகர்வோரை வற்புறுத்தக் கூடாது என்றும் நாம் தெளிவாகக் குறிப்பிடுகிறோம். அவ்வாறு செய்ய முடியாவிட்டால், தேங்காய் சார்ந்த தயாரிப்புகளின் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும்.
நன்றி.
இப்படிக்கு,
ரஞ்சித் விதானகே
தலைவர்
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம்



