News

குழந்தை பால் மாவில் நச்சுப்பொருள் – ஐரோப்பா முழுவதும் கடுமையான எச்சரிக்கைகள்

குழந்தை பால் மா தயாரிப்புகளில் ‘Cereulide’ எனும் நச்சுப்பொருள் அடங்கியுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து, உலகின் முன்னணி வர்த்தக முத்திரை தயாரிப்புகள் சந்தையிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பாவின் சுகாதார அதிகாரிகள் இது குறித்து பெற்றோருக்கு கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கப்பூரின் நிலைமை – Dumex தயாரிப்புகள் மேலும் அகற்றப்படுகின்றன.


சிங்கப்பூர் உணவு முகமை (SFA) நேற்று (ஜனவரி 30) Dumex Dulac Stage 1 மற்றும் Dulac Stage 2 தயாரிப்புகளை உடனடியாக சந்தையிலிருந்து அகற்றுமாறு உத்தரவிட்டது.


இது ஜனவரி மாதத்திற்குள் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது அகற்றலாகும்.
இந்த நச்சுத்தன்மையின் காரணமாக அறிகுறிகளைக் காட்டிய மூன்று குழந்தைகள் இதுவரை பதிவாகியுள்ளதாக சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


ஐரோப்பாவை உலுக்கிய Danone நிறுவனத்தின் முடிவு :
உலகின் முன்னணி உணவு உற்பத்தி நிறுவனமான Danone, அயர்லாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட தனது குழந்தை பால் மா கையிருப்புகளை ஐரோப்பா முழுவதும் சந்தையிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.


அயர்லாந்து உணவு பாதுகாப்பு ஆணையம் (FSAI), Aptamil, Nutrilion, Cow & Gate ஆகிய வர்த்தக முத்திரைகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறது.


ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்த பால் மா தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் ARA oil எனும் மூலப்பொருள் Cereulide மூலம் மாசடைந்துள்ளது. இந்த எண்ணெய் வகை சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டது எனத் தெரியவந்துள்ளது.
Cereulide நச்சு என்பது ;
Cereulide என்பது Bacillus cereus எனும் பாக்டீரியாவினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு நச்சுப் பொருளாகும்.


இது உடலில் நுழைவதால் குமட்டல் மற்றும் வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
பொதுவாக பால் அருந்தி 30 நிமிடங்கள் முதல் 6 மணித்தியாலங்களுக்குள் இந்த அறிகுறிகள் தோன்றும் என்றும், 24 மணித்தியாலங்களுக்குள் குணமடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இதனால் கடுமையான சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதால் அதிகாரிகள் தீவிர அவதானம் செலுத்தி வருகின்றனர்.


பொருளாதார தாக்கம் மற்றும் நிறுவனங்களின் இழப்பு :
இந்த நிலைமையால் Danone நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 8.3% வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இது 2025 பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த மதிப்பாகும்.


இந்த ஒட்டுமொத்த செயல்முறை காரணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button