News

நீங்கியது தடை.. ஈரானில் பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு அனுமதி

ஈரானில் பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு இருந்துவந்த நீண்டகால சட்டச் சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ளன.

இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவில் ஈரானின் முதலாம் துணை ஜனாதிபதி முகமது ரேசா ஆரிஃப் கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானிய சட்டத்தில் பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டக்கூடாது என்று நேரடியாகத் தடை விதிக்கப்படவில்லை.

இருப்பினும், நடைமுறையில் காவல்துறையினர் பெண்களுக்கு உரிமம் வழங்க மறுத்து வந்தனர்.

முறையான உரிமம் இல்லாத காரணத்தால், வீதி விபத்துக்களின் போது பெண்கள் பாதிக்கப்படுபவர்களாக இருந்தாலும், அவர்களே சட்ட ரீதியாகக் குற்றவாளிகளாகக் கருதப்படும் நிலை இதுவரை நீடித்தது.

ஜனவரி இறுதியில் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த புதிய தீர்மானம், பெண்களுக்குப் பயிற்சி அளிக்கவும், பரீட்சைகளை நடத்தி உரிமம் வழங்கவும் போக்குவரத்து காவல்துறையினருக்கு கட்டளையிட்டுள்ளது.

இந்த மாற்றமானது ஈரானில் சமீபகாலமாக வெடித்த தொடர் போராட்டங்களின் ஒரு முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு ஆடைக்கட்டுப்பாட்டு விதிகளுக்காகக் கைது செய்யப்பட்ட மஹா அமினி காவலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பெண்கள் தமக்கான சுதந்திரம் கோரி பாரிய போராட்டங்களை முன்னெடுத்தனர்.

கடந்த சில மாதங்களில் ஈரானியத் தெருக்களில் பெண்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது கணிசமாக அதிகரித்திருந்தது.

தற்போது அரசாங்கம் அதனை அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளது.

உரிமம் வழங்கப்பட்டாலும், பெண்கள் பொதுவெளியில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது இஸ்லாமிய ஆடைக்கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெண் பயிற்றுவிப்பாளர்கள் மூலம் பயிற்சிகளை வழங்கவும், மின்சார மோட்டார் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் புதிய திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button