தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றத்திற்கும் வெற்றிகளுக்கும் முந்தைய அரசாங்கத்தின் பங்களிப்பும் ஒரு காரணம் என்பதை அங்கீகரிக்க வேண்டும் ; ஹர்ஷ டி சில்வா கோரிக்கை

நாட்டின் தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தில் முந்தைய அரசாங்கத்தின் பங்களிப்பும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில், இலங்கையின் தற்போதைய அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் காட்டும் அர்ப்பணிப்பைப் பாராட்டியிருந்தார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஹர்ஷ டி சில்வா, தற்போதைய அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மையில் காட்டும் அக்கறையையும், சர்வதேச நாணய நிதிய பணிப்பாளரின் சாதகமான நிலைப்பாட்டையும் அவர் வரவேற்றுள்ளார்.
தற்போதைய வெற்றிகளுக்கான அடித்தளம் முந்தைய ஆட்சியிலேயே போடப்பட்டதாக அவர் வாதிடுகிறார்.
70 வீதமாக இருந்த பணவீக்கம் 2 வீதமாகக் குறைக்கப்பட்டது. -7.3 வீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 வீதமாக மாற்றப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் முதலாவது தேசிய ஆளுமை கண்டறிதல் ஆய்வு முந்தைய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டது.
எனவே, தற்போதைய சீர்திருத்தங்களைப் பாராட்டும் அதேவேளை, இந்த ஆரம்பக்கட்ட வெற்றிகளைப் புறக்கணிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.



