ஈரான் அதியுயர் தலைவர் காமெனி உயிரிழந்தாக ஈரான் அரச ஊடகங்கள் அறிவித்தன.

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுடன் அயதுல்லாவின் மகள், மருமகன் மற்றும் பேரனும் உயிரிழந்துள்ளனர்.
காமனெ கொல்லபட்டதையடுத்து 40 நாள்கள் துக்கத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் 7 நாள்கள் அரச விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
காமனெவுக்கு உரிய பணிகளை அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை (28) அதிகாலையில் ஆற்றிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்டதாக பார்ஸ் கூறியுள்ளது.
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) இதற்குப் பழிவாங்குவதாக சபதம் செய்துள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள 27 தளங்கள் மற்றும் டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேலிய ராணுவ வசதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்தப் படை தெரிவித்துள்ளது. கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வெடிப்புச் சத்தங்கள் தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளன.
புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அதிபர் மசூத் பெசெஷ்கியன் உள்ளிட்ட இடைக்காலக் குழு நாட்டை நிர்வகிக்கும் என்று ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதே சமயம், ஈரான் முழுவதும் 24 மாகாணங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 201 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
தமது நோக்கங்களை அடையும் வரை, ஈரான் மீதான குண்டுவீச்சு “வாரம் முழுவதும் தடையின்றி அல்லது தேவையான காலம் வரை” தொடரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் இஸ்ரேல் மற்றும் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஜோர்டான், சவுதி அரேபியா மற்றும் ஈராக் உள்ளிட்ட பல மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துக்களை இலக்கு வைத்துள்ளன. இருதரப்புத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இப்பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் தங்களது வான்வெளியை மூடியுள்ளன.



