விபத்துக்குள்ளான ஈரானிய போர்க் கப்பலில் இருந்து 32 ஈரானியர்கள் மீட்கப்பட்டு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர்

இலங்கை கடற்படையினரால் ‘IRIS Dena’ என்ற ஈரானிய போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு காலிக்கு அழைத்து வரப்பட்ட 32 ஈரானியர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்று (04) அதிகாலை காலி கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் குறித்த கப்பல் ஆபத்தில் சிக்கியுள்ளதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, இலங்கை கடற்படையினர் மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
ஈரானிய கடற்படைக் கப்பல் கடலில் சிக்கலில் சிக்கியபோது அதில் சுமார் 180 பேர் இருந்ததாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் முன்னதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“எங்களுக்கு முதலில் அதிகாலை 5.08 மணியளவில் அபாய அழைப்பு கிடைத்தது. ஈரானிய கடற்படைக் கப்பலுக்கு உதவுவதற்காக நாங்கள் உடனடியாக இரண்டு கடற்படைக் கப்பல்களை அனுப்பினோம். அதன்பிறகு, உதவி தேவைப்படுபவர்களை மீட்க கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டன. அவசர உதவி தேவைப்பட்ட 30 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர்.
அவர்கள் காலியில் உள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
ஈரானிய கடற்படைக் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் இல்லை, ஆனால் காலி கடற்கரைக்கு மிக அருகில் இருந்ததாக அமைச்சர் ஹேரத் மேலும் தெரிவித்தார்.
“1979 ஆம் ஆண்டின் கடல்சார் தேடல் மற்றும் மீட்புக்கான சர்வதேச உடன்படிக்கையின் (SAR Convention) படி, எந்தவொரு நாட்டின் கப்பலாக இருந்தாலும், ஆபத்தில் இருக்கும்போது அதற்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

