இலங்கைக்கு அருகில் விபத்துக்குள்ளான ஈரான் போர்க்கப்பல் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றால் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என தகவல் – இதில் குறைந்தது 101 பேர் காணாமல் போயுள்ளனர்.

இலங்கையின் தெற்கு கடற்பரப்பிற்கு அப்பால் ஈரானிய கப்பல் ஒன்று நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சம்பவத்தில், குறைந்தது 101 பேர் காணாமல் போயுள்ளதுடன் மேலும் 78 பேர் காயமடைந்துள்ளதாக இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
காலி கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக ஈரானிய கடற்படைக் கப்பலான ‘IRIS Dena’ விடுத்த அபாய சமிக்ஞையை அடுத்து இலங்கை கடற்படைக் கப்பல்கள் அங்கு அனுப்பப்பட்டன.
காயமடைந்த பல ஈரானிய கடற்படை வீரர்கள் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 32 பேர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் முன்னதாக உறுதிப்படுத்தினர்.
மீட்கப்பட்டவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ஏனைய பலர் நடுத்தர மற்றும் சிறிய அளவிலான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, கடலில் காணாமல் போனவர்களைக் கண்டறியவும் அவர்களுக்கு உதவவும் இலங்கை கடற்படைக் கப்பல்கள் தொடர்ந்தும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
எவ்வாறாயினும், நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கைகளை இலங்கை அதிகாரிகள் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்தத் தகவல் வௌியாகியுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.



