தேனில் கை வைத்தவர் விரல்களை சுவைக்காமல் இருக்கமாட்டார் – ஜனாதிபதியாக நியமிக்கபட்டவர் அப்பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு தேவையான சூட்சுமங்களை தேடிக்கொண்டிருக்கிறார் ; ஹக்கீம்
தேனில் கை வைத்தவர் விரல்களை சுவைக்காமல் இருக்கமாட்டார் என்ற சிங்கள பழமொழி உண்டு. அதற்கேற்பவே ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட ஒருவர், அதில் தொடர்ந்து இருப்பதற்கு தேவையான சூட்சுமங்களை தேடிக்கொண்டிப்பதே இந்த நாட்டில் இருக்கும் பிரச்சினை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பில் உண்மையில் அரசியலமைப்பில் முரண்பாடான நிலை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தேனில் கை வைத்தவர் விரல்களை சுவைக்காமல் இருக்கமாட்டார் என்று சிங்களத்தில் ஒரு பழமொழி இருக்கிறது,. அதனால் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட ஒருவர், அதில் தொடர்ந்து இருப்பதற்கு தேவையான சூட்சுமங்களை தேடிக்கொண்டிப்பதே இந்த நாட்டில் இருக்கும் பிரச்சினை.
அரசியலமைப்பில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அமைச்சரவைக்கு முரண்பாடு இருந்தாலும், உயர் நீதிமன்றம் அது தொடர்பில் 3 தடவைகள் உறுதிப்படுத்தியுள்ளது.
அப்படியானால் அரசாங்கம் ஏன் இதுதொடர்பில் அவசரப்படவேண்டும்? உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பில் வழக்கு தொடுத்தது யாருடைய தேவைக்கு என்பது அனைவருக்கும் தெரியும்,ஆனால் அமைச்சரவையின் தீர்மானத்துக்கு பின்னர் அது வெளிப்பட்டுள்ளது.
இதற்கு பின்னரல் மறைமுகமான வேலைத்திட்டம் இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்திருக்கிறது. பாராளுமன்றத்தில் இருக்கும் ஒருசிலருக்கு தங்களின் கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. அதேபோன்று அடுத்த தேர்தலில் பாராளுமன்றத்துக்கு வரமுடியாது என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.அதனால் பாராளுமன்ற தேர்தலை இரண்டு வருடங்களுக்கு பிற்படுத்திக்கொள்ள முடியுமானால் இவர்களுக்கு அது மகிழ்ச்சி . எனவே ஜனாதிபதிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இந்த தேவை இருக்கிறது. அதனை மேற்கொள்ளவே இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றார்