அசைக்க முடியாதது என்று உலகமே நம்பியதை ஈரான் அசைத்து காட்டிக் கொண்டிருக்கிறதா?

✍️ Dr Arshath Ahamed
மத்திய கிழக்கின் புவிசார் அரசியலில் இன்று ஈரான் ஒரு சாதாரண நாடாக மட்டுமல்லாமல், மாறாக அமெரிக்க வல்லரசுக்கும் அதன் கூட்டாளி இஸ்ரேல் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஒரு மீட்பராக உருவெடுத்துள்ளது. 47 ஆண்டுகால பொருளாதாரத் தடைகள் ஈரானை முடக்கும் என்று கணக்குப் போட்ட மேற்குலகிற்கும், அயல் அறபு ஷேக்குகளுக்கும், அந்தத் தடைகளே ஈரானின் சுயசார்பு மற்றும் மீளெழுச்சிக்கு (Resilience) உரமாக அமைந்திருப்பது ஒரு வரலாற்று விந்தை என்றால் ஐயமில்லை.
ஈரானின் வலிமை அதன் ஆயுதங்களில் மட்டும் இல்லை, அதன் தலைவர்களின் அறிவாற்றலிலும் உள்ளது என்பதை இந்த போரில் ஈரான் உலகிற்கு தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. ஈரானின் ஒரு முன்னணித் தலைவர் கொல்லப்பட்டால், அவரைப் பிரதியீடு செய்ய வரும் அடுத்த நபர் 10 ஆண்டுகால இராணுவ அனுபவம், ஒரு பி.எச்.டி (PhD) பட்டம், நான்கு மொழிகளில் புலமை என பட்டத்தோடும்
பதவிகளோடும் வெளியே வருகிறார். சிலவேளை அவர் ஒரு பேராசிரியராகவோ அல்லது விமானியாகவோ இருக்கிறார். எது எப்படி சாத்தியம் என்பது வல்லரசுகளுக்கே புரியாத புதிராக இருக்கிறது. இந்த ஒன்றே, ஈரான் இந்த யுத்தத்திற்காக எவ்வளவு தயார் நிலையில் இருந்திருக்கிறது, ப்ளான் B, ப்ளாக் C என அடுத்த கட்ட தலைவர்களை அடையாளம் கண்டு வைத்திருக்கிறதுஎன்பதை தெளிவாக கோடிட்டு காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று முழு உலகமே ஆகர்ஷிக்கும் கொண்டாடும் ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி (FM) இங்கிலாந்தின் கென்ட் பல் கலைக் கழகத்தில் அரசியலில் பி.எச்.டி பட்டம் பெற்றவர். ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன்ஒரு புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர். இப்படி பெரிய பதவிகளில் இருக்கும் எல்லோரும் பெரும் கல்விப் பின்னணி கொண்ட தலைவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் உணர்ச்சிவசப்படாமல் மிகத் தெளிவான அறிவுசார் தளத்தில் நின்று போரை முன்னெடுக்கிறார்கள். அமெரிக்காவுடனான Asymmetrical Warfare ல் தெளிவான Calculated Movesகளை மேற் கொள்கிறார்கள். போரை ஒரு சதுரங்கம்போ , ச்செஸ் போல ஆடுகின்றார்கள். இந்தியாவில் உருவான செஸ் விளையாட்டை விருத்தி செய்து உலகிற்கு வழங்கியவர்கள் பாரசீகர்கள் என்பது என்பது கொசுறு தகவல்.
வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அமெரிக்காவிற்கு விடுத்த எச்சரிக்கை உலகப்புகழ் பெற்றதாக, கிட்டிய காலத்தில் மிகவும் வைரலான ஒரு பஞ் டயலாக்காக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா ஒருவேளை தரைப் போருக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, அவர் மிக நிதானமாக, “நாங்கள் அவர்களுக்காகக் காத்திருக்கிறோம்’ என்று சொல்லி விட்டு ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தது அவர்கள் இந்த போருக்கு தேவையான எல்லா ஹோம் வேர்க்களையும் ஏற்கனவே செய்து முடித்து விட்டார்கள் என்பதை மறைமுகமாக சொல்வதாக இராணுவ ஆர்வலர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். அதுபோல அண்மையில் ஈரானிய படைத் தளபதி சொன்ன “இன்னும் நெருங்கி வாருங்கள் (Come Closer)…” என்று வாசகம் ஈரானின் 7,000 ஆண்டுகால பாரசீக நாகரிகத்தின் வீரத்தை உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றது.
ஈரான் தனது இராணுவ வலிமையை வெளிநாடுகளிடம் இருந்து கடன் வாங்காமல் மாறாக உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் பெரும் தலையிடியாக மாறி உள்ளது. ஈரானின் ‘ஃபத்தாஹ்’ (Fattah) போன்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியை விட 15 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியவை. இவை இஸ்ரேலின் ‘அயன் டோம்’ (Iron Dome) போன்ற பாதுகாப்பு அமைப்புகளையும் மீறித் தாக்கக்கூடியவைகளாக வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கின்றன. அதுபோல ஈரானின் ‘ஷாஹீட்’ (Shahed) ட்ரோன்கள் இன்று உலகையே வியக்க வைக்கின்றன. குறைந்த செலவில் அதிக சேதத்தை விளைவிக்கும் இந்தத் தொழில்நுட்பம், அமெரிக்காவின் பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு அரண்களைத் தகர்த்து வருவது போர் ஆய்வாளர்களை கூட மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. அது போல அமெரிக்காவின் மிக விலையுயர்ந்த RQ-4 Global Hawk போன்ற ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதன் மூலம் ஈரானின் வான் பாதுகாப்பும் வலிமையானது என்பதையும் ஈரான் நிரூபித்துள்ளது.
47 ஆண்டுகளாகத் தொடரும் பொருளாதாரத் தடைகள் ஈரானை ஒரு தனித்துவமான பொருளாதார மொடலாக மாதிரியாக மாற்றியுள்ளது. இதனால் ஏனைய அரபு நாடுகளைப் போல இறக்குமதில் ஈரான் தங்கியிருக்கவில்லை. மத்திய கிழக்கில், ஈரான் தற்சார்பு உற்பத்தியில் முன்னோடியாக இருக்கிறது. ஈரானில் பயன்படுத்தப்படும் 90% மருந்துகள் மற்றும் அடிப்படை இயந்திரங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.
இதனால் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) தனது கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தின் நாடித் துடிப்பை ஈரான் தன் கையில் எடுக்க கூடய பலத்தை ஈரானுக்கு வழங்கியுள்ளது. அதுபோல அமெரிக்க சார்பு அரபு நாடுகளின் இறக்குமதி வர்த்தகத்தையும் ஈரான் தடை செய்துள்ளது. இது அமெரிக்காவை நேரடியாகப் போரில் இறங்குவதைத் தடுக்கும் ஒரு மாபெரும் பொருளாதார அரணாக ஈரானுக்கு இருக்கிறது. இதுவரை காலமும் எதுவிதமான பிரச்சனையும் இல்லாமல் திறந்திருந்த ஹார்மூஸ் நீரினையை திறப்பதற்காகவே இப்போது யுத்தம் செய்ய வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு வந்திருப்பது இவ்வளவு துரதிஷ்டவசமானது என்று அரசியல் ஆய்வாளர்கள் விமர்சனம் செய்கின்றனர். மீமர்கள் இந்த ஒரு காரணத்துக்காகவே டொனால்ட் ரம்பை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கின்றனர்
ஈரானின் பெண்களை விடுவிக்கப் போகிறோம் புரட்சி செய்யப் போகிறோம் என்று கூவித்திரிந்த அமெரிக்காவுக்கு
ஈரானின் கல்விப் புரட்சி பெண்களை மையப்படுத்தியே நகர்ந்திருக்கிறது என்ற செய்தி உவப்பானதாக இல்லை. அமெரிக்காவின் பொய் உலக அரங்கில் கேவலமாக தோற்று இருக்கிறது. அமெரிக்காவின் நிர்வாணம் வெளி உலகிற்கு வெளிச்சமாக தெரிந்திருக்கிறது. மேற்குலகின் போலிப் பிரச்சாரங்களை, தற்போது மீடியாக்களில் வெளிவரும் புள்ளிவிவரங்கள் சுக்கு நூறாக்கிக் கொண்டிருக்கின்றன. ஈரானில் பல்கலைக்கழக சேர்க்கையில 70% பெண்கள். அமெரிக்காவில் இது சுமார் 58% மாத்திரமே. அதுபோல இப்போது உலகின் சக்தி வாய்ந்த உயர் கல்வி துறையான STEM கல்வி (அறிவியல்/பொறியியல்) 70% இடங்களை ஈரானிய பெண்கள் நிரப்புகின்றனர். ஆனால் அமெரிக்காவில் சுமார் 35% பெண்களே இந்த துறையில் கல்வி பயில்கின்றனர். இதற்கு நேர் மாறாக ஆபாச படங்களை வீடியோக்களை அப்லோட் செய்யும் Only Fans போன்ற இஸ்ராயிலிய தளங்களில் 20% அமெரிக்கா பெண்கள் தங்கள் 20வயதிலேயே நுழைந்துவிடுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் இது போன்ற தளங்களில் ஈரானிய பெண்களின் சதவீதம் 0%. இப்போது அமெரிக்கா சொல்லும் பெண் விடுதலை எது என்று அமெரிக்க கல்வியாளர்களே கேள்வி கேட்க தொடங்கி இருக்கின்றனர்.
இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக, முன்னாள் பிரிட்டிஷ் உளவுத்துறை (MI6) தலைவர் அலெக்ஸ் யங்கர் (Alex Younger) சமீபத்தில் குறிப்பிடுகையில், “அமெரிக்கா இந்த மோதலில் தனது முன்முயற்சியைத் தவறவிட்டுவிட்டது. ஈரான் தற்போது மேலோங்கிய நிலையில் (Upper Hand) உள்ளது” என்று ஆச்சரியத்துடன் ஒப்புக்கொண்டுள்ளது உலக அளவில் ஈரானின் அந்தஸ்த்தை உயர்த்தி இருக்கிறது. இது ஐரோப்பிய யூனியன் நாடுகளை இந்தப் போரில் இருந்து தூரமாக வைத்திருப்பதற்கு இன்னும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க இஸ்ரேலிய வீரியமான தாக்குதல்களால் ஈரானிய கட்டிடங்கள் உடைந்தாலும், ஒன்றன் பின் ஒன்றாக தலைவர்கள் கொல்லப்பட்டாலும், நிறைய பொருட் சேதங்கள் உயிர் இழப்புக்கள் ஏற்பட்டாலும், ஈரான் இன்னும் இராணுவ ரீதியாகப் பலவீனமடையவில்லை என்பது பெரும் ஆச்சரியமான விஷயமாக இப்போது மாறியிருக்கிறது. அமெரிக்காவின் வலிந்த திணிக்கப்பட்ட தடைகளையும், தாக்குதல்களையும் ஒரு புதிய உலக ஒழுங்கிற்கான வாய்ப்பாக ஈரான் மாற்றி அமைத்திருக்கிறது. “நானும் சாகிய உன்னையும் கொல்லிக ” என்ற புகழ் பெற்ற வசனத்தை ஈரான் பிரக்டிலாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஏனைய “கோழை அறபு நாடுகளை” போல அல்லாமல், வல்லரசுகளின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல், பின் கதவால் டீல் செய்யாமல், அறிவாற்றலுடனும் துணிச்சலுடனும் ஈரான் நிமிர்ந்து நிற்கிறது என்ற செய்தி, நீதிக்காக எழுந்து நிற்கும் சாதாரண மக்களுக்கும் , குறிப்பாக நொந்து போய் இருக்கும் முஸ்லீம்களுக்கும் ஒரு மன ஆறுதலை வழங்கி இருக்கிறது. அராஜாகத்துக்கு எதிராக பேச முடியாத எழுந்து நிற்க நிற்க முடியாத உங்கள் ‘சுன்னிகளை” விட , இவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியிலும் எதிர்த்து நிற்கும், திமிறிக்கொண்டிருக்கும், ஷியாக்களே மேல் என்று சாதாரண முஸ்லிம்களே பகிரங்கமாக சொல்லும் அளவிற்கு களநிலவரம் மாறி இருக்கிறது. அதுபோல, எடுத்ததற்கெல்லாம் “தீர்வை வரி”, ” நான் விரும்பியதை செய்வேன், அதை கேட்க நீ யார்? ” என்று காட்டு தர்பார் நடத்திக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு எதிராக எழுந்து நிற்க முடியும், பேச முடியும், குறிப்பாக No சொல்ல முடியும் என்ற தைரியத்தை உலகின் பல நாடுகளுக்கு இந்தப் போர் வழங்கி இருக்கிறது. இதன் விளைவாக பாரசீகப் பேரரசின் வாரிசுகள், மீண்டும் ஒருமுறை உலக வரலாற்றைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளனர் என்ற செய்தியை ஈரான் உலகிற்கு தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறது.
பிற்குறிப்பு – ஈரானின் பல சரக்கு கடை ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம். இங்கே உள்ள பொருட்களில் ஏதாவது ஒன்று உங்களுக்கு தேவையானால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். யுத்தம் முடிந்ததும் காசை கொடுத்து விடுங்கள் என்று எழுதியிருக்கிறது.




