News

செக் குடியரசு நாட்டில் இருந்து இலங்கை வந்து, காட்டில் தியானத்தில் ஈடுபட்டு வந்த தேரர், சிறுத்தை தா*க்குதலுக்கு உள்ளாகி உயிரிழப்பு

குமண தேசிய பூங்காவிற்கு உட்பட்ட பம்பரகஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்திற்கு அருகில் அமைந்துள்ள குடும்பிகலை தபோவனத்தில் தங்கியிருந்த பிக்கு ஒருவர், சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகி கடந்த (25) ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த 45 வயதுடைய நந்த தேரர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பம்பரகஸ்தலாவ பகுதியிலுள்ள தொல்பொருள் சிதைவுகளைக் கொண்ட குகை ஒன்றில் இவர் தியானத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நீண்ட நேரமாக தேரர் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்காததால், அப் பகுதியில் தேடுதல் நடத்தியபோது வனப்பகுதிக்குள் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

சிறுத்தையின் தாக்குதலால் தேரரின் கழுத்து மற்றும் மார்புப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன், உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தைச் சூழ சிறுத்தையின் கால் தடங்கள் தெளிவாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த தேரரைத் தவிர, இன்னும் சில பிக்குகளும் அந்தப் பகுதியில் தங்கியிருந்து தியானத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வனவிலங்கு பாதுகாப்பு மன்றத்தின் செயலாளரும் சுற்றாடல் ஆர்வலருமான நயனக்க ரன்வெல்ல இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்:

“வனவிலங்குகள் அதிகமுள்ள தேசிய பூங்காவிற்குள் இவ்வாறு தங்கியிருப்பது உயிருக்கு ஆபத்தானது எனச் சுற்றாடல் ஆர்வலர்கள் நீண்டகாலமாக எச்சரித்து வந்துள்ளனர்.”

இச்சம்பவம் குறித்து வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பாணமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button