News

நாங்கள் நிறுத்த மாட்டோம் – அமெரிக்கா நிரந்தர அவமானத்தை சந்திக்கும் வரை, சரணடைதலையும் சந்திக்கும் வரை  போர் நீடிக்கும்- எமது தாக்குதலும் தொடரும் ; ஈரான் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது தெரிவித்த கருத்துகளுக்கு, ஈரான் இராணுவம் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்கா நிரந்தர அவமானத்தை சந்திக்கும் வரை தற்போதைய போர் நீடிக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் அரசு ஊடகமான பிரஸ் டி.வியில் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில்,

எங்கள் இராணுவ ஆற்றல் மற்றும் எங்கள் ஆயுதங்கள் குறித்த அமெரிக்காவின் உளவுத் தகவல் முழுமையற்றது.

எங்களின் உண்மையான ஆற்றலைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களின் முக்கியமான ஏவுகணை உற்பத்தித் தளங்கள், நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்கள், நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், மின்னணுப் போர் மற்றும் சிறப்பு ஆயுதங்களை நீங்கள் அழித்துவிட்டதாக எண்ண வேண்டாம்.

அத்தகைய அனுமானங்கள் நீங்கள் சிக்கியுள்ள சகதியை மேலும் ஆழமாக்கும். நீங்கள் தாக்கியதாக நினைக்கும் எங்கள் தளங்கள் முக்கியமற்றவை; எங்களின் முக்கிய இராணுவ உற்பத்தி, உங்களுக்குத் தெரியாத மற்றும் உங்களால் ஒருபோதும் அடைய முடியாத இடங்களில் நடைபெறுகிறது.

எங்களின் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் ஆயுத தளங்களை அடைய நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம்; நீங்கள் தவறாகவே அதனை கணிப்பீர்கள். உங்களால் எதையும் சாதிக்க முடியாது.

எங்கள் கண்ணியமிக்க, அன்புக்குரிய, முஸ்லிம் தேசத்துக்கு எதிராக நீங்கள் தொடங்கிய போருக்கு நீங்கள் விலை கொடுக்க வேண்டும். நீங்கள் நிரந்தர அவமானத்தையும், வருத்தத்தையும், சரணடைதலையும் சந்திக்கும் வரை இந்தப் போர் தொடரும்.

நீங்கள் ஏற்கெனவே பெற்ற கடுமையான அடிகளின் தொடர்ச்சியாக, எங்களிடமிருந்து மேலும் பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல்களை எதிர்பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button