புதிய அரசியல் கலாசாரத்தை தேர்ந்தெடுத்தது சரியான முடிவா அல்லது தவறான முடிவா என்பது பொதுமக்களுக்கே தெரியும் எனத் தெரிவித்து மீண்டும் அரசியலில் குதிக்க உள்ள அர்ஜுன ரணதுங்க

முன்னாள் அமைச்சரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான அர்ஜுன ரணதுங்க, வரும் மாதங்களில் மீண்டும் அரசியலில் நுழையக்கூடும் என்பதற்கான சமிக்ஞையை வெளியிட்டுள்ளார்.
தனது தற்போதைய நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த ரணதுங்க, தான் மகாநாயக்க தேரர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதேவேளை அரசியலுக்கு திரும்புவதற்கு ஏராளமான அழைப்புகள் கிடைப்பதாகவும் வெளிப்படுத்தினார்.
தனது முடிவு அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் எடுக்கப்படும் என்று விளக்கிய அவர், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு தங்களை நிலைநிறுத்திக் கொள்ள கால அவகாசம் வழங்குவதற்காகவே தான் ஆரம்பத்தில் ஒதுங்கியிருந்ததாகக் குறிப்பிட்டார்.
“புதிய அரசியல் கலாசாரம் வேண்டும் என்று பொதுமக்கள் கூறினார்கள். அது அவர்களுக்கு கிடைத்துள்ளது. இப்போது அது சரியான முடிவா அல்லது தவறான முடிவா என்பது பொதுமக்களுக்கே தெரியும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு சிறிது கால அவகாசம் கொடுப்பதற்காக நான் அரசியலில் இருந்து விலகி இருந்தேன். ஆனால் எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால், நான் மீண்டும் வருவதைத் தடுக்க எதுவுமில்லை” என்று ரணதுங்க தெரிவித்தார்.
நிகழ்வொன்றின் போது செய்தியாளர்களிடம் பேசிய ரணதுங்க, சூழ்நிலைகள் கோரினால் மீண்டும் பணியாற்றுவதற்கு தான் தயாராக இருப்பதாக வலியுறுத்தினார்.

