News

தரம் குறைந்த நிலக்கரித் தொகுதிகளால் புத்தளம்- நுரைச்சோலை பிரதேச மக்கள் (குறிப்பாக பெண்களின்) உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்பாட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் வெளியிட்டுள்ள தகவல்கள்

தரம் குறைந்தவை என சந்தேகிக்கப்படும் அண்மைய நிலக்கரித் தொகுதிகள், அதிகப்படியான பாதரச அளவைக் கொண்டிருக்கக்கூடும் எனவும், இது சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ) கவலை வெளியிட்டுள்ளது.

‘தி ஐலண்ட்’ (The Island) பத்திரிகையின் படி, சுற்றுச்சூழல் விஞ்ஞானியும் சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவருமான ஹேமந்த விதானகே கூறுகையில், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் உள்ள பாதரசத்தின் அளவு குறித்து இலங்கை இன்னும் கட்டாயத் தரநிலைகளை உருவாக்கவில்லை என்றும், இதனால் நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் வசிக்கும் மக்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலையில் இருப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

“சர்வதேச ஆய்வுகளின்படி, நிலக்கரியில் உள்ள பாதரசத்தின் அளவு கணிசமாக மாறுபடலாம். உதாரணமாக, தென்னாப்பிரிக்க நிலக்கரி குறித்த ஆய்வுகள் 0.01 முதல் 0.49 ppm வரையான அளவைக் காட்டுகின்றன. இருப்பினும், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கான அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட பாதரச அளவை இலங்கை இன்னும் நிர்ணயிக்கவில்லை,” என்று விதானகே குறிப்பிட்டார்.

நுரைச்சோலை மின்நிலையத்திற்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமம் 0.01 mg/Nm³ வரையிலான பாதரச வெளியேற்றத்தை அனுமதித்தாலும், மூலப்பொருளில் உள்ள பாதரச அளவைக் கட்டுப்படுத்தாமல் வெளியேற்றத்தை மட்டும் ஒழுங்குபடுத்துவது போதுமானதல்ல என்று அவர் விளக்கினார்.

நுரைச்சோலையில் நிலக்கரி எரிப்புக்களின் போது வெளியேறும் பாதரசம் கடல் சூழலில் கலந்து, இறுதியில் உள்ளூர் மக்களால் உட்கொள்ளப்படும் மீன்களில் சேரக்கூடும் என்று சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் நம்புகிறது.

“2018 ஆம் ஆண்டு புத்தளம் அருகிலுள்ள கற்பிட்டி தீபகற்பத்தில் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் நடத்திய ஆய்வில், குழந்தை பெறும் வயதிலுள்ள பெண்களிடையே ஆபத்தான அளவில் பாதரச பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அந்த ஆய்வின்படி, 36 பெண்களில் 28 பேருக்கு (சுமார் 77%), சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 1 ppm பாதுகாப்பு வரம்பை விடக் கூடுதல் அளவிலான பாதரசம் அவர்களின் தலைமுடி மாதிரிகளில் காணப்பட்டது. இதில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னவென்றால், ஒரு நபருக்கு 15.584 ppm அளவு பதிவாகியிருந்தது. இந்தப் பெண்கள் புத்தளம் களப்பில் உள்ள மீன்களைத் தொடர்ந்து உட்கொள்பவர்கள், இது ஒரு உயிரியல் திரட்சியை (bioaccumulation) உணர்த்துகிறது,” என்று விதானகே விளாக்கினார்.

வீரியமிக்க நரம்பு நச்சான பாதரசம், மெத்தில்மெர்க்குரியாக (methylmercury) மாறி உணவுச் சங்கிலிக்குள் நுழையக்கூடும் என்றும், இது கடலோர மற்றும் மீனவ மக்களைப் பெருமளவில் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் பாதரச அளவிற்கான தேசியத் தரநிலைகளை அறிமுகப்படுத்துதல், அனைத்து நிலக்கரித் தொகுதிகளையும் கட்டாய சுயாதீன சோதனைக்கு உட்படுத்துதல் மற்றும் மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் வாழும் மக்களின் ஆரோக்கியம் குறித்து விரிவான மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இப்போது வலியுறுத்தி வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button