ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளது – புதன் விடுமுறை தினமும், ஒற்றை இரட்டை இலக்க எரிபொருள் முறையும் இல்லாமக்கப்பட உள்ளது ; அமைச்சர் விஜித ஹேரத்

ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் “இல மகா விரு” நினைவேந்தலை முன்னிட்டு இன்று (05) மாத்தறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு போர் ஆரம்பமானதையடுத்து ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் தற்போது முகாமைத்துவம் செய்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட புதன்கிழமையை வரும் நாட்களில் மீண்டும் ஒரு வேலை நாளாக மாற்ற முடியும் என்றும், QR முறை மற்றும் ஒற்றை-இரட்டை இலக்க முறையை நீக்கிவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் என்றும் அவர் கூறினார்.
“ஏற்கனவே நாங்கள் புதிய முறைகளை அறிமுகப்படுத்தினோம். முதல் இரண்டு வாரங்களில் சில சிரமங்கள் இருந்தன என்பது உண்மைதான். வரிசைகள் காணப்பட்டன. QR முறையை அறிமுகப்படுத்தினோம்,
ஒற்றை-இரட்டை முறையை அமுல்படுத்தினோம். புதன்கிழமையை விடுமுறை தினமாக்கினோம். சில உடனடி நடவடிக்கைகளை எடுத்தோம்.
இப்போது வரிசைகளை இல்லாது செய்துள்ளோம். தற்போது QR முறை மற்றும் ஒற்றை-இரட்டை முறை சிறப்பாகச் செயல்படுகிறது.
இன்னும் சில நாட்களில் அது தேவையில்லை என்றால் நாம் அதை நீக்கிவிடுவோம். அதற்கு நாம் தயாராக இருக்கிறோம். புதன் கிழமை விடுமுறையைத் தொடர வேண்டிய அவசியமில்லை.
நிலைமையை முகாமைத்துவம் செய்த பிறகு தேவையான நேரத்தில் வேலைகளை ஆரம்பிப்போம். அந்த நேரத்தில் ஏற்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ளவே நாம் அவ்வாறு செய்தோம்.
வரும் என்று சொல்லப்பட்ட கப்பல்கள் ஒரே நேரத்தில் வர முடியாது என்று கூறப்பட்டது. விநியோகம் வழங்கப்படவில்லை.
அதனால்தான் அவ்வாறு செய்தோம். ஆனால் பயப்பட வேண்டாம், ஏப்ரல் மாதத்தில் மேலும் 9 கப்பல்கள் வரவுள்ளன…”



