காட்டுக்குள் வழிதெரியாமல் சிக்கித் தவித்த 20 வயது நெதர்லாந்து நாட்டு பெண் – தேடுதல் வேட்டை நடத்தி பத்திரமாக மீட்ட பொலிஸார்

ஹட்டன், சிங்கமலை வனப்பகுதியின் மலை உச்சியில் வழிதெரியாமல் சிக்கித் தவித்த 20 வயதுடைய நெதர்லாந்து நாட்டு மாணவி ஒருவரை, ஹட்டன் பொலிஸார் நேற்று (06) மாலை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாம் பகுதியைச் சேர்ந்த லூனா (Luna) என்ற மாணவி, ருகுணு பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்வி நடவடிக்கைகளுக்காக இலங்கை வந்துள்ளார். கடந்த 4ஆம் திகதி ஹட்டன் பகுதிக்கு வருகை தந்த அவர், நேற்று காலை சிங்கமலை வனப்பகுதிக்குத் தனியாக உலாச் சென்றுள்ளார். இதன்போது பாதையைத் தவறவிட்ட அவர், காட்டின் உட்பகுதிக்குச் சென்று மலை உச்சியில் சிக்கிக்கொண்டார்.
மாணவி காணாமல் போனது குறித்து ருகுணு பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு அதிகாரி வழங்கிய தகவலுக்கு அமைய, ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் ஆலோசனையின் பேரில் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
ஹட்டன் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த டி சில்வா தலைமையிலான குழுவினர், அடர்ந்த வனப்பகுதிக்குள் தேடுதல் நடத்தினர். இதன்போது மலை உச்சியில் உள்ள பாறை ஒன்றின் மேல் அச்சத்துடன் அமர்ந்திருந்த மாணவியை மீட்ட பொலிஸார், அவரைப் பாதுகாப்பாகக் கீழே அழைத்து வந்தனர்.
இந்த மீட்பு நடவடிக்கையில் பொலிஸ் சார்ஜன்ட்களான பாலசூரிய (8824), சிறி (39127) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் மதுஷான் (89877) ஆகியோர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.
மஸ்கெலியா நிருபர்

