கல்னேவவில் உள்ள இந்திரஜித்தின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாடிய ஜனாதிபதி

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுச் சடங்குகளில் கலந்துகொள்ளும் நோக்கில், ‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட அனுராதபுரம், கல்னேவா பிரதேச செயலகப் பிரிவின் மல்பேலிகல கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த எச்.எம். இந்திரஜித் சம்பத் சேனாரத்ன என்பவரின் புதிய இல்லப் பிரவேசத்திலும், புத்தாண்டு கொண்டாட்டத்திலும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று (14) முற்பகல் கலந்துகொண்டார்.
முழுமையாகப் சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டின் கீழ், ஐந்து மாத காலப்பகுதிக்குள் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கல்னேவா பிரதேச செயலகப் பிரிவில் முழுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகளுக்காகக் கட்டப்படும் ஆறு புதிய வீடுகளில் இதுவும் ஒன்றாகும்.
அத்துடன், இந்தப் பிரதேச செயலகப் பிரிவில் பகுதியளவில் சேதமடைந்த 66 வீடுகளுக்கான இழப்பீடுகளும் தற்போது வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.
பிரதேச மக்களுடன் இணைந்து புதிய வீட்டில் புத்தாண்டுச் சடங்குகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அங்கிருந்த மக்கள் அனைவருக்கும் தனது சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதேவேளை, ஜனாதிபதியை பெருமதிப்புடன் வரவேற்ற பிரதேசவாசிகள், ஜனாதிபதிக்கும் தமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க, வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அனுராதபுர மாவட்டச் செயலாளர் ரஞ்சித் விமலசூரிய உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் சேனாரத்னவின் குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு



