News

பேராசை பெரும் நஷ்டம் – அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தும் நம்பிக்கை துரோகிகள் – கவனமாக இருங்கள் ⚠️

அண்மைக் காலமாக எமது ஊரை அண்மித்த ஒரு ஊரில் வியாபார முதலீடு என்ற பெயரில் பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மையிலேயே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகின்றன.

இத்தகைய சம்பவங்களைப் பற்றி பேசும்போது பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்தவர்களின் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு நின்றுவிடக்கூடாது. ஏனெனில் ஒவ்வொரு பண மோசடியின் பின்னாலும் ஒருவரின் பேராசை, மற்றொருவரின் நம்பிக்கை, இன்னொருவரின் வார்த்தை மீதான கண்மூடித்தனமான நம்பிக்கை போன்ற பல காரணிகள் இருக்கலாம்.

அதிக இலாபம் கிடைக்கும், சிறிது காலத்தில் பணம் இரட்டிப்பாகும், மாதம் இவ்வளவு வருமானம் உறுதி, இது மிகவும் நம்பகமான முதலீடு என்று வழக்கத்திற்கு மாறான இலாப வாக்குறுதிகள் முன்வைக்கப்படும் போது நம்முடைய மனதில் முதலில் எழ வேண்டியது இவ்வளவு இலாபம் எப்படி சாத்தியம்? என்ற கேள்வியாக இருக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில் அந்தக் கேள்வியை விட எனக்கு எவ்வளவு கிடைக்கும் என்ற ஆசையே நம்மை ஆட்கொள்கிறது. அதுதான் ஆபத்தின் தொடக்கம்.

அவர் நல்ல மனிதர்… சமூகத்தில் நல்ல பெயர் உள்ளவர்… பலருக்கும் உதவி செய்தவர்… நம்முடைய குடும்பத்துக்கு நெருக்கமானவர்… அவரை நம்பாமல் வேறு யாரை நம்புவது… என்று ஒருவருடைய தனிப்பட்ட நல்ல பெயரையும், சமூக அந்தஸ்தையும் வைத்து பெரிய தொகையான பணத்தை எந்தவிதமான முறையான சரிபார்ப்புமின்றி ஒப்படைப்பது மிகவும் ஆபத்தானது. ஒருவர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், பண விஷயத்தில் நம்பிக்கை மட்டும் போதாது. நிதானமும், ஆவணங்களும், சட்டரீதியான பாதுகாப்பும், முறையான சரிபார்ப்பும் அவசியம்.

நாம் ஒருவரை நம்பலாம் ஆனால் அந்த நம்பிக்கையை ஆவணப்படுத்துவதில் தவறு இல்லை. நாம் ஒருவரை மதிக்கலாம் ஆனால் பணம் கொடுப்பதற்கு முன் அவருடைய முதலீட்டுத் திட்டத்தை ஆராய்வதில் தவறு இல்லை. நாம் ஒருவருடைய நல்ல குணங்களைப் பாராட்டலாம் ஆனால் நமது வாழ்நாள் சேமிப்பை ஒப்படைக்கும் முன் கேள்வி கேட்பது அவநம்பிக்கை அல்ல அது பொறுப்பு.

அதே நேரத்தில் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்பவர் செய்தது மிகப்பெரிய தவறு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பிறருடைய நம்பிக்கையைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்று, வாக்குறுதிகளை மீறி, குடும்பங்களின் சேமிப்பையும் எதிர்காலத்தையும் அழிப்பது மன்னிக்க முடியாத அநீதி. ஆனால் மறுபுறம் அதிக இலாபம் கிடைக்கும் என்ற பேராசையில் எந்தவிதமான சரிபார்ப்பும் இல்லாமல் பணத்தை ஒப்படைப்பதும் புத்திசாலித்தனமான முடிவல்ல. ஏனெனில் ஒரு உண்மை மிகவும் கசப்பானதாக இருந்தாலும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பேராசை இருக்கும் இடத்தில்தான் ஏமாற்றுபவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கிறது. நிதானம் இருக்கும் இடத்தில் அந்த வாய்ப்பு குறைகிறது. ஒருவரை நம்புவதற்கு முன் இவர் நல்லவரா என்று மட்டும் கேட்பதைவிட இந்த முதலீடு உண்மையிலேயே சாத்தியமானதா… இதற்கான முறையான ஆவணங்கள் உள்ளனவா… இவ்வளவு இலாபம் எப்படி கிடைக்கப் போகிறது… இழப்பு ஏற்பட்டால் என்ன பாதுகாப்பு இருக்கிறது… சட்டரீதியாக என்னுடைய பணத்திற்கு என்ன பாதுகாப்பு…  என்ற கேள்விகளையும் நாம் கேட்க வேண்டும்.

முக்கியமாக அவர் ஏன் என்னை ஏமாற்றினார் என்பதற்கு முன்பு நான் ஏன் இவ்வளவு அதிகமான இலாபத்தை எதிர்பார்த்தேன் என்று நம்மை நாமே ஒரு கேள்வி கேட்க வேண்டும். ஒருவருடைய மோசடி அவருடைய குற்றம். ஆனால் நம்முடைய பேராசை நம்முடைய பலவீனம். பண விஷயத்தில் நம்பிக்கை இருக்கட்டும் ஆனால் கண்மூடித்தனமான நம்பிக்கை வேண்டாம். முதலீடு இருக்கட்டும், ஆனால் முறையான ஆய்வுடன் இருக்கட்டும். இலாப ஆசை இருக்கட்டும், ஆனால் பேராசையாக மாறிவிடக் கூடாது. ஏனெனில் பணத்தை இழந்த பிறகு கிடைக்கும் அனுபவத்தைவிட, பணத்தை இழப்பதற்கு முன் கிடைக்கும் நிதானமான சிந்தனை எப்போதும் மேலானது.

இறுதியில் ஏமாற்றப்படாமல் இருப்பதும் ஒரு வகையான புத்திசாலித்தனமே.

✍️Naleem Hassim

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button