அமைச்சர் லால்காந்தவின் சொத்துக்கள் 4.6 பில்லியன் ரூபாயைத் தாண்டியது என்ற செய்தியை வெளியிட்ட ஹிரு ஊடக வலையமைப்புக்கு எதிராக ஏழு நாட்களுக்குள் 10 பில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை வழங்குமாறு லால்காந்த சட்டப்பூர்வ அறிவித்தலை வெளியிட்டார்

அமைச்சர் கே.டி. லால்காந்த, தனது 2025ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தை தவறாகச் சித்தரித்தமை மற்றும் அவதூறான உள்ளடக்கங்களை வெளியிட்டமைக்காக ஆசியா புரோட்காஸ்டிங் கோர்ப்பரேஷன் (தனியார்) லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக சட்டப்பூர்வ அறிவித்தலை விடுத்துள்ளார்.
ஏப்ரல் 18 எனத் திகதியிடப்பட்ட அந்த அறிவித்தலில், ஏப்ரல் 16 அன்று ஹிரு ஊடக வலையமைப்பு ஒளிபரப்பிய செய்தியொன்றில், அமைச்சரின் சொத்துப் பிரகடன விபரங்களை மேற்கோள் காட்டி அவரது சொத்துக்கள் 4.6 பில்லியன் ரூபாய்க்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தரவுகள் திட்டமிட்ட முறையில் மிகைப்படுத்தப்பட்டும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டும் உள்ளதாகவும், குறிப்பாக அவரது மகளின் பெயரிலுள்ள சொத்துக்கள் மற்றும் நிறுவனப் பங்குகள் தொடர்பான கூற்றுக்கள் அவ்வாறு அமைந்துள்ளதாகவும் லால் காந்த வாதிடுகிறார்.
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் (CIABOC) சமர்ப்பிக்கப்பட்ட பிரகடனத்தில் தனது பெயர், மனைவியின் பெயர் மற்றும் மகளின் பெயரிலுள்ள சொத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், ஊடக நிறுவனம் அவற்றை தவறாக வழிநடத்தும் வகையில் முன்வைத்ததாக அந்த சட்ட அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அமைச்சர் லால் காந்தாவின் சொத்துக்கள் 4.6 பில்லியன் ரூபாயைத் தாண்டியது” என்ற தலைப்பில் டிஜிட்டல் தளங்களில் இந்த அறிக்கை மீண்டும் வெளியிடப்பட்டமையானது, தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கம் கொண்டது என அமைச்சர் வாதிடுகிறார்.
மேலும், இந்த ஒளிபரப்பானது அமைச்சரை ஊழல்வாதியாகச் சித்தரித்து, வாக்காளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அவரைத் தவறாகக் காட்டி, அவரது பொதுப் பிம்பத்திற்குப் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிவித்தல் கோருகிறது.
இதற்காக 10 பில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை ஏழு நாட்களுக்குள் வழங்குமாறு கோரியுள்ள அமைச்சர் லால் காந்தா, அதனைத் தவறும்பட்சத்தில் செலவுகள் மற்றும் வட்டியுடன் கூடிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
அத்துடன், பொது அலைவரிசையை பக்கச்சார்பான மற்றும் அவதூறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதாகக் கூறி, ஹிரு ஊடக வலையமைப்பின் ஒளிபரப்பு உரிமத்தை ரத்து செய்யுமாறு அதிகாரிகளிடம் மனு அளிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.




