News

அமைச்சர் கே.டி. லால்காந்தவின் சொத்து தொடர்பான புள்ளிவிபரங்கள் கணக்கீட்டில் தவறு செய்துவிட்டோம் என ஹிரு தொலைக்காட்சி சேவை அறிவித்தது

அமைச்சர் கே.டி. லால்காந்தவின் சொத்து விபரங்கள் தொடர்பாக முன்னைய செய்தியில் வெளியான புள்ளிவிபரங்கள் கணக்கீட்டுத் தவறு என ஹிரு தொலைக்காட்சி சேவை ஒப்புக்கொண்டுள்ளது.


சனிக்கிழமை வெளியிடப்பட்ட திருத்தத்தில், அமைச்சரின் பிணையங்கள் (securities) ரூபா 38.39 கோடி பெறுமதியானது என்றும் அவரது மொத்த சொத்துக்கள் ரூபா 46 கோடியைத் தாண்டியுள்ளன என்றும் முன்னைய செய்தியில் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.


அமைச்சரால் பிரகடனப்படுத்தப்பட்ட பிணையங்களின் சரியான பெறுமதி சுமார் ரூபா 143,475 என்றும், கே.டி. லால் காந்தவினால் பிரகடனப்படுத்தப்பட்ட மொத்த சொத்துக்களின் பெறுமதி சுமார் ரூபா 8 கோடி என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.


முன்னதாக வெளியிடப்பட்ட பிணையங்களின் பெறுமதி மற்றும் மொத்த சொத்து விபரங்கள் துல்லியமற்றவை என அமைச்சரின் சட்டத்தரணி அனுப்பிய சட்ட அறிவித்தலைத் தொடர்ந்தே இந்தத் திருத்தம் வெளியிடப்படுவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.


கே.டி. லால் காந்தவுக்கு ஏற்பட்ட சங்கடங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள அந்த ஊடகம், பிழைகளைத் திருத்திக்கொள்ளும் ஊடக உரிமையின் கீழ் இந்தத் திருத்தம் வெளியிடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 16 அன்று ஒளிபரப்பப்பட்ட செய்தியில் தனது 2025 ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனம் தவறாகச் சித்தரிக்கப்பட்டதாகக் கூறி, ஏசியா புரோட்காஸ்டிங் கோப்பரேஷன் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக கே.டி. லால் காந்த சட்ட அறிவித்தல் ஒன்றை அனுப்பியிருந்தார்.


அதில் புள்ளிவிபரங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்த அமைச்சர், தனது மகளின் பெயரிலுள்ள பங்குகள் சுமார் ரூபா 143,000 பெறுமதியுடையவை என்றும், செய்தியில் கூறப்பட்டதைப் போல அவை பல கோடி பெறுமதியுடையவை அல்ல என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்காக அமைச்சர் ரூபா 10 பில்லியன் நட்டஈடு கோரியிருந்ததோடு, கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button