ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்ட நிலையில், ஈரானின் புரட்சிகர இராணுவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கிப் படகுகள் தங்களை சுட்டன என கப்பல் ஒன்று தெரிவித்தது

ஈரானின் புரட்சிகர இராணுவத்துடன் தொடர்புடைய “இரண்டு துப்பாக்கிப் படகுகள்” தங்களை நோக்கிச் சுட்டதாகக் கப்பல் ஒன்றிடமிருந்து அறிக்கை கிடைத்துள்ளதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தகச் செயற்பாட்டு (UKMTO) அமைப்பு தெரிவித்ததை அடுத்து, ஹோர்முஸ் நீரிணையில் புதிய பாதுகாப்பு அச்சம் ஏற்பட்டுள்ளது.
UKMTO அமைப்பின் அறிவுறுத்தலின்படி, வானொலி மூலம் எவ்வித முன்னெச்சரிக்கையும் விடுக்காமல் அந்த இரண்டு துப்பாக்கிப் படகுகளும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கப்பலின் மாலுமி தெரிவித்துள்ளார்.
எனினும், கப்பலும் அதன் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
இப்பகுதியில் உள்ள வணிகக் கப்பல்களுக்கு ஈரானிய கடற்படையிடமிருந்து வானொலிச் செய்தி ஒன்று கிடைத்துள்ளதாக கப்பல் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டுள்ளதாகவும், எந்தக் கப்பல்களும் கடந்து செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என்றும் அந்தச் செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூலோபாய நீர்வழி வணிகப் போக்குவரத்திற்காகத் திறந்திருக்கும் என்று ஈரான் முன்னதாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த முரணான செய்திகள், உலகின் மிக முக்கியமான எரிசக்தி விநியோகப் பாதைகளில் ஒன்றின் ஊடாகச் செயற்படும் உலகளாவிய கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுக்கு இடையே வளர்ந்து வரும் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளன.
இந்த நீரிணையில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம், கடல்சார் காப்புறுதிச் செலவுகள் மற்றும் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மை குறித்த புதிய கவலைகளை ஏற்படுத்தக்கூடும்.
ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற குறைந்தது இரண்டு வணிகக் கப்பல்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானதாக ராய்ட்டர்ஸ் மற்றும் ஏபி ஆகிய செய்தி நிறுவனங்கள் ஏப்ரல் 18 சனிக்கிழமை அன்று தெரிவித்துள்ளன. ஈரானின் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் நீர்வழியில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.



