🕋 🌕
விசாகப் பெளர்ணமி வாரமும் உழ்ஹிய்யா கடமைகளும்: முஸ்லிம் சமூகம் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்!

எதிர்வரும் மே மாதம் 28 ஆம் திகதி ஹஜ் பெருநாள் இடம் பெறவுள்ள நிலையில் 30 ஆம் திகதி விசாகப் பெளர்ணமி தினமும் வருகிறது.
ஹஜ் பொது விடுமுறை மற்றும் விசாக பெளர்ணமி தின விடுமுறையுடன் உள்ளடங்களாக 27 ஆம் திகதி முதல் ஜுன் மாதம் 02 ஆம் திகதி வரை பெளத்த விசாக வாரமாக அமைச்சரவை பிரகடனம் செய்துள்ளது.
என்றாலும் பெளர்ணமி தினங்களில் மதுபான விற்பனை நிலையங்கள், மாமிச விற்பனை நிலையங்கள் யாவும் மூடப்பட்டு பெளத்தமத ஆசார தர்மங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதனை நாம் அறிவோம்.
அந்த வகையில் ஹஜ் பெருநாள் தினமும் அய்யாமுத் தஷ்ரீக் முதலாவது நாளான 29 ஆம் திகதியும் இயன்றவரை பேணுதலாக அவதானமாக நாம் உழ்ஹிய்யாஹ் கடமைகளை நாட்டின் சட்டதிட்டங்களுககு ஏற்ப நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக விசாகப் பெளர்ணமி தினமான 30 ஆம் திகதி பெளத்தமத சகோதர சமூகத்தின் உணர்வுகளை மதித்து நாம் குர்பானி செய்வதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
முதலிரு தினங்களும் நிறைவேற்றுவதில் சிரமங்கள் இருந்தால் ஐயாவும தஷ்ரீக் மூன்றாம் நாள் 31 ஆம் திகதியும் உழ்ஹிய்யாவை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
உழ்ஹிய்யா நிறைவேற்றுவதற்கும் அதற்குரிய பிராணிககளை கொண்டு செல்வதற்கும் ஊராட்சி மன்றங்களின் அனுமதி தரப்ப்பட்டாலும் ஒவ்வொரு ஊர் மஹல்லா தலைமைகளும் மிகவும் பொறுப்புணர்வுடன் மேற்படி கடமையினை நிறைவேற்றூவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்தல் வேண்டும்.
இயன்றவரை உழ்ஹிய்யா பிராணிகளை இரண்டொரு தினங்களிற்கு முன்னரே மஸ்ஜித் வளாகங்களில் காட்சிப்படுத்தலை தவிர்த்தல், சிறியவர்கள் இளைஞர்கள் அவற்றை படமெடுத்தலை முற்றாகத் தவிர்த்தல், விசாக பெளர்ணமி தினமன்று விநியோகங்களை தவிர்த்தல், பிராணிகளின் கழிவுகளை முறையாக அகற்றுதல், பொது இடங்களில் வீசிவிடாதிருப்பதனை உறுதி செய்தல் போன்ற விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்துதல் வேண்டும்.
கடந்த காலங்களில் சமூகம் எதிர் கொண்ட சவால்களை மனதில் கொண்டு நீறுபூத்த நெருப்பாக ஆங்காங்கே இருக்கும் தீய இனமதவாத சக்திகளின் காழ்ப்புணர்வு நிகழ்ச்சி நிரல்களுக்கு நாம் களமமைத்துக் கொடுத்து விடாமல் மிகவும் அவதானமாகவும் பொறுப்பாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் புதிய திருப்பங்களை கண்டுவரும் நிலையிலும், அரசிற்கெதிரான சில சக்திகளின் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள், பரப்புரைகளுக்கு மத்தியிலும் நாட்டில் அமைதி சமாதானத்தை மற்றுமொருமுறை சீர்குலைத்து அரசியல் இலாபமீட்ட விரும்பும் சக்திகள் ஆங்காங்கே சூழ்சிகள் சதி முயற்சிகளில் ஈடுபடுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.
தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏதேனும் ஒரு பிரதேசத்தில் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுவதில் தடைகள் ஏற்படின் அவ்வப்பிரதேச உலமாக்கள் சமூக முக்கியஸ்தர்கள் நிதானமாக அறிவு பூர்வமாக கூடி ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும், தேவையான வழிகாட்டல்களை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா, தேசிய ஷூரா சபை, ஷரீஆ கவுன்ஸில் போன்ற தேசிய சன்மார்க்க மற்றும் சிவில் தலைமைகளிடம் பெற்றுக் கொள்ளலாம், இஸ்லாமிய ஷரீஆவில் அத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கான வழிகாட்டல்கள் இருக்கின்றன!
என்றாலும், அவ்வாறான சதிமுயற்சிகளை அரங்கேற்றுவதற்கு தற்போதைய அரசு காவல்துறை மற்றும் பாதுகாப்பு தரப்புகள் இடமளிக்க மாட்டாதென நாங்கள் நம்புகிறோம், அமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் இல்லாத நிலையில் மேற்படி விடயத்தில் ஆளும் எதிர்க்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் சிவில் சன்மார்க்கத் தலைமைகள் உரிய நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்தல் வேண்டும்.
*மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 24.04.2026 || SHARE



