யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரான் முன்வைத்துள்ள புதிய பேச்சுவார்த்தை முன்மொழிவுகள் எனக்கு பிடிக்கவில்லை ; டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அதிருப்தி

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரான் முன்வைத்துள்ள புதிய பேச்சுவார்த்தை முன்மொழிவுகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈரான் அரசாங்கம் பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவிற்கு இந்தப் புதிய சமாதானத் திட்டத்தை அனுப்பியது. எனினும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை எனத் தெரிகிறது.
சமாதான உடன்படிக்கையை எட்டுவதில் ஈரான் சில முன்னேற்றங்களைக் காட்டியுள்ள போதிலும், அவர்கள் உண்மையாகவே அந்த இலக்கை அடைவார்களா என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்:
“ஈரானின் இந்த முன்மொழிவுகள் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. அவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டினாலும், இறுதி முடிவை எட்டுவார்களா என்பது சந்தேகமே.”
பாகிஸ்தானின் தூதுவர் பணி
ஈரான் தனது புதிய யோசனைகளை பாகிஸ்தான் மூலமாகவே அமெரிக்காவிற்குத் தெரியப்படுத்தியுள்ளது. எதிர்வரும் நாட்களில் பாகிஸ்தானில் இது தொடர்பான நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் குறித்துக் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், “பாகிஸ்தான் மீதும் அதன் தலைவர்கள் மீதும் நான் மிகுந்த மதிப்புக் கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் மத்தியஸ்தம் முக்கியத்துவம் பெறுவது உறுதியாகியுள்ளது.
மர்மமாக இருக்கும் முன்மொழிவுகள்
ஈரானிய ஊடகங்கள் இந்தத் திட்டத்தை உறுதிப்படுத்திய போதிலும், அதில் உள்ள நிபந்தனைகள் அல்லது கோரிக்கைகள் என்ன என்பது குறித்த விபரங்கள் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.
தற்போதைய நிலையில், ஈரானின் திட்டங்களை அமெரிக்கா நிராகரித்துள்ளதால், பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச ரீதியில் அதிகரித்துள்ளது.



