அரசுக்கும், ஜனாதிபதிக்கும் எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, மக்களுக்காக வீதிக்கு இறங்கி போராடப் போவதாக சஜித் அறிவிப்பு
தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் உரிமைகளை இல்லாதொழித்து வருகின்றது. VAT வரி வலையை விரிவுபடுத்தி மக்களை துயரத்துக்கும், அசௌகரியத்துக்கும், வறுமைக்கும் வேதனையின் உச்சத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கின்றது.
சிரேஷ்ட பிரஜைகளினது சேமிப்புகளுக்கு வழங்கப்பட்ட 15% வட்டியையும் குறைத்திருக்கும் நிலையில், நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியை நிலைநாட்டும் முறையை மீறி, நாட்டின் நீதித்துறையின் பிரதான ஊடகப் பேச்சாளராக ஜனாதிபதி மாறியுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதி நீதித்துறையின் ஊடகப் பேச்சாளராக மாறிவிட்டார் போலும்…
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு இடையிலான தடைகள் மற்றும் சமன்பாடு சரியாகப் பேணப்படுவதன் மூலம் ஜனநாயகத்தை பலப்படுத்த முடியும்.
இருப்பினும், நாட்டின் ஜனாதிபதி தற்போது நீதித்துறை செயற்பாடுகள் குறித்து எதிர்வுகூறல்களை முன்வைப்பதன் மூலமும், நீதித்துறையின் செயற்பாடுகள் குறித்து ஒரு பிரதான ஊடகப் பேச்சாளராகவும், வர்ணனையாளராகவும் செய்திகளை உருவாக்குபவராகவும் செயற்பட்டு வருகிறார். இது நீதித்துறையை அவமதிப்பதோடு, ஜனநாயகச் செயல்முறையை மீறி நீதித்துறையின் சுதந்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இது ஜனநாயகத்திற்கும் நீதித்துறையின் சுயாதீனத்துக்கும் விடுக்கப்படும் பெரும் அடியாகும்.
ஜனாதிபதியின் இத்தகைய செயற்பாடானது நாட்டின் அரசியல் சுதந்திரம், ஜனநாயக உரிமை, நீதித்துறைச் செயல்முறை மற்றும் ஜனநாயகக் கட்டமைப்புக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும். எனவே, மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச் சுமையை உடனடியாக நிறுத்தி, மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி, சிரேஷ்ட பிரஜைகளினது சேமிப்புகளுக்கான வட்டியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதித்துறையில் தலையிடாமல் அதை வலுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். பல நீதிபதிகள் தங்களது பதவி உயர்வுகள் மற்றும் நியமனங்களுக்காகக் காத்திருக்கும் சூழலில், அரசாங்கம் அந்த நியமனங்களைக் கூட வழங்கவில்லை. நீதித்துறையை வலுப்படுத்தி ஜனநாயகத்தின் தூண்களான மூன்று அதிகார மையங்களின் அதிகாரங்களைப் பாதுகாப்பதும், இவற்றுக்கிடையிலான தடைகள் மற்றும் சமனபாடுகளையும் பாதுகாப்பதை விடுத்து, நீதித்துறை செயற்பாடுகள் குறித்து எதிர்வுகூறுபவராக ஜனாதிபதி செயற்படக்கூடாது என்று எதிர்ககட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கம் மக்களுடன் செய்து கொண்ட சமூக ஒப்பந்தை மீறினால் நாம் மக்களுக்காக வீதிக்கு இறங்குவோம்.
அவ்வாறே, நாட்டு மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை வலுப்படுத்தி, அவர்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதோடு, ஒரு சிறந்த வாழ்க்கைத்தரத்தை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் சமூக உடன்படிக்கையாக அமைந்து காணப்படுகின்றது. இந்த உடன்படிக்கையை மீற வேண்டாம் என அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம். ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அவ்வாறு அதனை மீறினால், மாற்று அரசாங்கம் என்ற ரீதியில் எதிர்க்கட்சி மக்கள் சார்பாக வீதியில் இறங்கிப் போராடும் என்று எதிர்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்



