News

திறைசேரி அதிகாரி ரங்க ராஜபக்ஷவின் மரணம் தொடர்பில் அவரின் மனைவியையும் இழுத்து பொய் தகவலை பரப்பிய விவகாரம்… கம்மன்பில விசாரணைகளுக்காக அழைக்கப்படுவார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிப்பு

(செ.சுபதர்ஷனி)

திறைசேரியின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷவின் மரணம் தொடர்பில் சட்டத்தரணி உதய கம்மன்பில வெளியிட்டுள்ள கருத்துக்கள் உண்மைக்குப்புறம்பானவை எனவும், இது குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் விசாரணை அதிகாரிகளால் அழைக்கப்படவுள்ளாரெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (5) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரகுல படகும்புர பகுதியில் திறைச்சேரியின் வெளிநாட்டு வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளைத் திசைதிருப்பும் வகையில் உதய கம்மன்பில கருத்து வெளியிட்டு வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (5) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிதியமைச்சின் கீழ் உள்ள வெளிநாட்டு வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களில் ஒருவராகக் கடமையாற்றிய ரங்க ராஜபக்ஷ, மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார், குற்றப்புலனாய்வு பிரிவினர், அரச இரசாயன பகுப்பாய்வு பிரிவினர் மற்றும் தடயவியல் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த உயிரிழப்புத் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நான்கு சட்டவைத்திய அதிகாரிகளைக் கொண்ட விசேட நிபுணர் குழுவினரால் இம்மாதம் முதலாம் திகதி குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அந்த அறிக்கையும் தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், விசாரணைகளுக்காக உயிரிழந்த நபர் பயன்படுத்திய கார், கையடக்கத் தொலைபேசி, சிம் அட்டைகள், வங்கிக் கணக்கு அட்டைகள் மற்றும் ஏனைய முக்கிய ஆவணங்கள் குளியாப்பிட்டிய பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியில், கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் சட்டத்தரணி உதய கம்மன்பில, இந்த வழக்கு விசாரணைகளைத் திசைதிருப்பும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, உயிரிழந்த நபரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரின் மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக உண்மைக்குப்புறம்பான தகவலை அவர் ஊடகங்கள் முன்னிலையில் முன்வைத்துள்ளார்.

உதய கம்மன்பில தெரிவிக்கும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், அவர் விசாரணைகளைத் திசைதிருபும் வகையில் இவ்வாறான கருத்துகளை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் இது குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் விசாரணை அதிகாரிகளினால் அழைக்கப்படவுள்ளார். அத்துடன், எதிர்வரும் வழக்கு விசாரணையின் போதும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளிப்பதற்கும் அவர் அழைக்கப்படுவார் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button