News

சாய்ந்தமருது மக்களின் நீண்டகால அரசியல் மற்றும் சமூகப் போராட்டத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்தது – நகரசபை பிரகடனத்துக்கு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியது

சாய்ந்தமருதுக்கு வரலாற்று வெற்றி : நகரசபை பிரகடனத்துக்கு உச்ச நீதிமன்ற அங்கீகாரம்- எல்லை நிர்ணயம் மேற்கொள்ள உத்தரவு

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது மக்களின் நீண்டகால அரசியல் மற்றும் சமூகப் போராட்டத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி ஒன்று கிடைத்துள்ளது. சாய்ந்தமருது நகரசபை பிரகடனத்துக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகரசபைக்கான எல்லை நிர்ணயங்களை மேற்கொள்ளுமாறு இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பின் மூலம், 2020ஆம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்ட போதிலும் நடைமுறைக்கு வராமல் இருந்த சாய்ந்தமருது நகரசபைக்கான சட்ட அடித்தளம் மேலும் வலுப்பெற்றுள்ளது. இதுவரை கல்முனை மாநகர சபையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்த சாய்ந்தமருதுக்கு தனித்த உள்ளூராட்சி அமைப்பை பெறும் பாதை இத்தீர்ப்பின் மூலம் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னணியில், சாய்ந்தமருதைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம் மற்றும் ஏ.ஆர்.எம். அசீம் ஆகியோர் இணைந்து 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

“2020ஆம் ஆண்டு சாய்ந்தமருது நகரசபை பிரகடனம் செய்யப்பட்டிருந்த போதிலும், அதற்கான தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது மக்களின் அடிப்படை உரிமை மீறலாகும். எனவே, சாய்ந்தமருது நகரசபைக்கான தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்” என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு முடிவடையும் வரை கல்முனை மாநகர சபைக்கான தேர்தலை நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

நீதியரசர்கள் ஜனக் டி.டி. சில்வா, பிரியந்த பெர்ணான்டோ மற்றும் சம்பத் அபேக்கோன் ஆகியோர் அடங்கிய அமர்வே இன்றைய தீர்ப்பை வழங்கியது. மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் ஞானராஜ் தலைமையிலான சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

சாய்ந்தமருதுக்கான தனி உள்ளூராட்சி சபையைப் பெற்றுக்கொள்வதற்காக ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம் முன்னின்று மேற்கொண்ட சட்ட மற்றும் மக்கள் இயக்கப் பணிகள் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் முக்கிய திருப்பமாக இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பார்க்கப்படுகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button