News

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பல தகவல்கள் அம்பலம்.. கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி கபில சந்திரசேன இன்று (08) காலை கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

கொள்ளுப்பிட்டி, பேட்ரிஸ் மாவத்தையில் உள்ள 37ஆம் இலக்க வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள குளியலறைக் கதவில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அருகிலுள்ள தனியார் வைத்தியசாலை ஊழியர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில்,கொள்ளுப்பிட்டி பொலிஸார் அந்த இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இது தற்கொலையா அல்லது கொலையா என்பதை உறுதிப்படுத்துவதற்காக விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமை மற்றும் பிணையாளர்கள் தொடர்பான சிக்கல் காரணமாக, அவரைக் மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று (07) பிடியாணை பிறப்பித்திருந்தார்.

கடந்த 5ஆம் திகதி அவருக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும்,அவர் சார்பில் முன்னிலையான இரண்டு பிணையாளர்களும் அவருடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் என்பது வெளிப்பட்டது.அந்த இரண்டு பிணையாளர்களும் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எயார்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கலில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றமை தொடர்பாக அவருக்கு எதிராக நீண்டகாலமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

தனது மனைவியின் பெயரில் புரூணை நாட்டில் போலி நிறுவனம் ஒன்றைத் தொடங்கி,சிங்கப்பூர் வங்கி கணக்குகளின் ஊடாக 1.4 மில்லியன் யூரோக்களுக்கும் அதிக பணத்தைப் பெற்றதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவர் மீது குற்றம் சுமத்தியிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க வந்திருந்தபோது, கடந்த மார்ச் 12ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டு 54 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த இலஞ்சப் பணம் அவுஸ்திரேலிய வங்கி கணக்குகளுக்கும் அன்றைய காலகட்டத்தில் இருந்த பணிப்பாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

இந்த மர்ம மரணம் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் மரண பரிசோதனை அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

Recent Articles

Back to top button