ஆட்சியே வேண்டாம், யாருக்கும் அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை. பதவிக்காக எவர் காலிலும் விழ தயாரில்லை. பேசாமல் ராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் மக்களிடமே போவேன்
ஆட்சியே வேண்டாம்; யாருக்கும் அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை. பதவிக்காக எவர் காலிலும் விழ தயாரில்லை. பேசாமல் இராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் மக்களிடமே போவேன்’ என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உரத்த குரலில் சொன்னதாக, தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
‘மெஜாரிட்டி கிடைக்கும் என்று நம்பினேன். கொஞ்சம் குறைந்து விட்டது. என்னை போலவே ஜாதி, மத, ஊழலுக்கு எதிரான மனநிலை கொண்ட சிறு கட்சிகள் ஆதரவு தரும் என எதிர்பார்த்தேன். கம்யூனிஸ்ட் கட்சிகள் பதவியை எதிர்பார்க்காமல் ஆதரவை தெரிவித்தனர். ஆதரவு தருவதாக அவர்களிடம் வாக்களித்த திருமாவளவன், நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை அடுக்குகிறார்.
ஸ்டாலின் ஆலோசனை கேட்டு செயல்படுகிறார்’ என்று விஜய் விரக்தியில் பேசியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ‘அரசியல் பற்றி எனக்கும் தெரியும். ஆனால், மக்களின் தீர்ப்புக்கு எதிரக இப்படி எல்லோரும் எனக்கு எதிராக அணி திரள்வார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை’ என விஜய் தன் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
‘ஆட்சி அமைப்பதற்கு முன்பே ஆயிரம் நிபந்தனை விதிப்பவர்கள், பதவி பிரமாணம் எடுத்த பிறகு என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. அப்படி ஒரு ஆட்சி அமைக்கத்தான் வேண்டுமா? பேசாமல் இராஜிநாமா செய்துவிட்டு, தமிழக மக்களிடமே திரும்ப போய், முழுசா ஆதரவு தாருங்கள் என்று கேட்டால் மறுக்கவா போகிறார்கள்?’ என விஜய் கேட்டுள்ளார்.
பதறிப்போன அவரது ஆலோசகர்கள், அப்படி அவசரமாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.
‘நமக்கு நிறைய ஒப்ஷன்கள் இருக்கின்றன. சுப்ரீம் கோர்ட் நம்மை கைவிடாது. மற்ற கட்சிகளிலும் மனசாட்சி உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வெளியில் இருந்து ஆதரவு தருவார்கள்’ என்று ஒரு ஆலோசகர் கூறியுள்ளார்.
சொந்த அண்ணனும், அண்ணனின் மகனும் சேர்ந்து மக்களின் தீர்ப்பை மாற்ற சதி செய்வதற்கு எதிராக தலைவரின் தங்கையே பொங்கி எழுந்த தகவலை இன்னொரு ஆலோசகர் சுட்டி காட்டியுள்ளார்.
‘ஒன்றே முக்கால் கோடி மக்களின் ஓட்டுகளை வீணாக்கி விட கூடாது. நீங்கள் ஒதுங்கினால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பவே நீங்கள் எதிர்க்கும் சக்திகள் காத்திருக்கின்ரன. அந்த வலையில் விழ வேண்டாம்’ என ஒருவர் சொல்லியிருக்கிறார்.
‘எந்த வழியும் பிடிக்கவில்லை என்றால், எதிரிகளே ஆட்சி அமைக்கட்டும் என விட்டு விட்டு, நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக அமரலாம். உங்களை மீறி அந்த அரசால் எதுவும் செய்ய முடியாது. அதிலேயே மக்களின் விருப்பத்தை பெருமளவு பூர்த்தி செய்ய முடியும்’ என மற்றொருவர் கூறியுள்ளார்.
யாருக்கும் பதில் சொல்லாமல் விஜய் மௌனம் சாதிப்பதால், உடன் இருப்பவர்கள் டென்ஷனில் உள்ளனர் என தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.


