தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தில் உள்ள குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர், இலஞ்சம் பெற்றபோது கைது!.
தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சி செலுத்தும் குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் பத்தரமுல்லைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
30 இலட்சம் ரூபா இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ளச் சென்றபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல் பேருந்து நிலையத்தைத் துப்பரவு செய்தல் மற்றும் பொது மலசலக்கூடங்களைப் பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தை (Tender) வழங்குவதற்காகவே பிரதி மேயர் இந்த இலஞ்சப் பணத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக 30 இலட்சம் ரூபா மற்றும் மாதாந்தம் தலா 5 இலட்சம் ரூபா வீதம் அவர் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கமைய, முதற்கட்டமாக 30 இலட்சம் ரூபாவைத் தன்னிடம் பெற்றுக்கொள்ளச் சென்றபோதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரதி மேயரை நாளை (09) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி குருணாகல் மாநகர சபைக்குத் தெரிவான இவர், பின்னர் சபையில் ஆட்சியமைப்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியதை அடுத்து, பிரதி மேயராகப் பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



