மனரீதியாகத் துன்புறுத்தப்பட்டு, அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்ட கபில சந்திரசேன உயிரை மாய்த்துக் கொண்டார் ; நாமல்

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் விசாரணை அதிகாரிகளால் அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றிய நாமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைக் குற்றச்சாட்டுகளில் தொடர்புபடுத்தி வாக்குமூலங்களை வழங்குமாறு சந்திரசேனவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
விசாரணையாளர்கள் எதனை எதிர்பார்க்கிறார்களோ அதற்கேற்ப வாக்குமூலங்களைப் பெறுவதற்காக, சந்திரசேன சிறையிலடைக்கப்படுவார் எனப் பயமுறுத்தப்பட்டதாகவும், அதிகாரிகளால் மனரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகவும் ராஜபக்ச குற்றம் சுமத்தினார்.
மேலும், பொலிஸ் மற்றும் விசாரணை முகவர் நிலையங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களை அரசாங்கம் அரசியல் நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
குற்றம் சுமத்தப்பட்ட எவராயினும் நியாயமான விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டும் என்றாலும், விசாரணைகளின் போது அச்சுறுத்தல், மிரட்டல் மற்றும் கட்டாயப்படுத்துதல் போன்றவை பயன்படுத்தப்படக்கூடாது என ராஜபக்ச தெரிவித்தார்.


